இந்திய ரயில்வே, ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்து ரயில் டிக்கெட் முன்பதிவுகளையும் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பயணிகள் முன்பதிவு முறைக்கு (PRS) மாற்றத் தயாராகி வருகிறது. பயணச்சீட்டு முன்பதிவை வேகமாகவும் எளிதாகவும் மாற்றுவதுடன், தொழில்நுட்ப கோளாறுகளை குறைப்பதே இந்த புதிய மாற்றத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதுதொடர்பாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பழைய முன்பதிவு முறையிலிருந்து புதிய முறைக்கு மாறும் போது, பயணிகள் எந்தவித சிரமத்தையும் எதிர்கொள்ளக்கூடாது என்று அதிகாரிகளுக்கு அவர் தெளிவான அறிவுறுத்தல் வழங்கியதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் மத்திய ரயில்வே இணை அமைச்சர்களான வி. சோமண்ணா மற்றும் ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோரும் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, ரயில் முன்பதிவு சேவைகளை மேலும் மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இந்திய ரயில்வே முதன்முதலில் 1986-ஆம் ஆண்டு பயணிகள் முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர், ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் இந்த முறை மேம்படுத்தப்பட்டு வந்தது. குறிப்பாக, 2002-ஆம் ஆண்டு இணையவழி டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட பிறகு, ரயில் டிக்கெட் புக்கிங் முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.
தற்போது இந்தியாவில் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளில் சுமார் 88 சதவீதம் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால், அதிக அளவிலான பயனர்களை ஒரே நேரத்தில் கையாளக்கூடிய புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் முன்பதிவு அமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, 2025-ல் “ரெயில்ஒன்” (RailOne) என்ற சூப்பர் செயலியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியது. இந்த செயலியில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட் உறுதியாகுமா என்பதை முன்கூட்டியே கணிக்க முடியும்.
ரயில்வே தரப்பின் தகவலின்படி, இந்த AI கணிப்பு முறையின் துல்லியம் முன்பு 53 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 94 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்கள் பயண திட்டங்களை முன்கூட்டியே எளிதாக திட்டமிட முடியும் என்று கூறப்படுகிறது.
மேலும், RailOne செயலி மூலம் பயணச்சீட்டு முன்பதிவு, ரத்து செய்தல், பணத்தை திரும்பப் பெற விண்ணப்பித்தல், பிளாட்ஃபார்ம் டிக்கெட் மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் ஒரே இடத்தில் பெற முடிகிறது. இதனுடன், ரயில்களின் நேரடி நிலை, பிளாட்ஃபார்ம் எண், பெட்டிகளின் இருப்பிடம் மற்றும் முழு ரயில் அட்டவணையையும் பயணிகள் அறிந்து கொள்ளலாம்.
பயணிகளின் புகார்கள் மற்றும் உதவிக்காக “ரெயில் மதாத்” சேவையும் இந்த செயலியில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி ஏற்கனவே நாடு முழுவதும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
தினமும் சுமார் 9.29 லட்சம் டிக்கெட்டுகள் இந்த செயலி மூலம் முன்பதிவு செய்யப்படுவதாகவும், இதில் 7.2 லட்சம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளும், 2.09 லட்சம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளும் அடங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், RailOne செயலி ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களில் கோடிக்கணக்கான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.



