இந்தியாவின் பழமைவாய்ந்த சிவன் கோவில்களில் வியப்பூட்டும் இயற்கை சக்தியும், இறை சக்தியும் ஒன்றிணைந்த அற்புதத் திருத்தலமாக இமாச்சலப் பிரதேசம் குலு மாவட்டத்தில் உள்ள பிஜிலி மகாதேவ் ஆலயம் திகழ்கிறது. உலகில் எங்கும் காண முடியாத அதிசயம் இந்த ஆலயத்தின் சிவலிங்கம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மின்னல் தாக்கி உடைந்து நொறுங்குவது.
ஆச்சர்யம் என்னவென்றால், அந்த மின்னல் கோவிலின் மற்ற பகுதிகளை ஒருபோதும் சேதப்படுத்தாது; கருவறை உள்ள சிவலிங்கம் மட்டும் தான் பாதிக்கப்படும். இந்த அதிசயத்தின் பின்னால் புராண கதைகள் உள்ளது. குலந்த் என்ற அரக்கன், மலைப்பாம்பாக உருவெடுத்து வியாஸ் நதியைத் தடுத்து, உயிர்களை நாசமாக்கிய போது, சிவபெருமான் அரக்கனை வதம் செய்தார்.
அரக்கனின் உடல் பிஜிலி மலை ஆகவும், அதன் மேலே தற்போதைய மகாதேவ் ஆலயம் கட்டப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. அரக்கனை அழித்த பிறகு, சிவபெருமான் இந்திரனை அழைத்து, “இந்த மலை மீது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மின்னலை வரவைக்க வேண்டும்” என உத்தரவிட்டதாக புராணம் கூறுகிறது. இன்றும் அந்த மரபு தொடர்கிறது என பக்தர்கள் நம்புகிறார்கள்.
மின்னல் தாக்கிய உடன், சிவலிங்கம் பல துண்டுகளாக உடைந்துவிடும். கோவில் சில நாட்கள் மூடப்பட்ட பிறகு, புரோகிதர்கள் கடலை மாவு, பருப்பு, உப்பு சேர்க்காத வெண்ணெய் ஆகியவற்றை கலந்த பசையால் சிவலிங்கத்தை மீண்டும் ஒட்டுவர். சில நாட்களில் சிவலிங்கம் அசலான வடிவத்துக்கு திரும்புவது பக்தர்களைக் கட்டியிழுக்கும் மற்றொரு தெய்வீக அற்புதம்.



