திண்டுக்கல் மாவட்டம், சத்திரப்பட்டி அருகே உள்ள விருப்பாச்சி பகுதியைச் சேர்ந்தவர் சிவசக்தி. இவரது மனைவி லாவண்யா(25). இந்த தம்பதிகளுக்கு வித்யூத் குமரன் (4) என்ற மகனும், அதிதி (2) என்ற மகளும் இருக்கிறார்கள். லாவண்யா வீட்டில் இருந்தபடியே பட்ட மேற்படிப்பு படித்து வந்தார். அத்துடன் வேலையும் தேடி வந்தார். அப்போது அவர் சமூக வலைதளங்களில் வந்த வேலை வாய்ப்பு விளம்பரங்களை பார்த்து அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டுள்ளார்.
செல்போனில் பேசிய நபர்கள், வேலைக்குச் சேர பணம் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதனை நம்பிய லாவண்யா, அவர்களுக்கு பல தவணைகளாக ரூ.5 லட்சம் வரை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். ஆனால், வேலை கிடைக்க வில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம், சிவசக்தி வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டார். குழந்தைகளுடன் வீட்டில் இருந்த லாவண்யா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகளின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று ஜன்னல் வழியாக பார்த்தபோது லாவண்யா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
கதவை உடைத்து உள்ளே சென்று அக்கம் பக்கத்தினர் லாவண்யாவை மீட்டு ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் லாவண்யாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.. ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



