தமிழக வெற்றிக்கழக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
கரூர் சம்பவத்தை தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா கடந்த செப்டம்பர் 30-ம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் வன்முறையை தூண்டும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருந்தார்.. அவரின் பதிவில் “ ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி என்றும், நேபாளம், இலங்கையை போல் தமிழ்நாட்டிலும் புரட்சி வெடிக்க வேண்டும் எனவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே உடனடியாக அவர் தனது பதிவை நீக்கிவிட்டார்..
வன்முறையை தூண்டும் வகையில் பேசிய ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அவர் மீது புகாரளிக்கப்பட்டது.. இதைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதவ் அர்ஜுனா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த வழக்கு விசாரணையில், ஆதவ் அர்ஜுனா தரப்பு, அந்த பதிவை ஆதவ் அர்ஜுனா அரை மணி நேரத்திலேயே நீக்கிவிட்டதாகவும், அந்த பதிவால் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டது..
காவல்துறை தரப்பு, ஆதவ் அர்ஜுனாவின் பதிவு டெலிட் செய்யப்படுவதற்கு முன்பு 1 லட்சம் பேர் வரை பார்த்ததாகவும், இது வன்முறையை தூண்டும் பதிவு என்றும், இது கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது என்றும் தெரிவிக்கப்பட்டது.. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தார்..
இந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது..



