ஆன்டிபயாடிக் மருந்துகளின் அதிகப்படியான பயன்பாடு மனித ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் நீண்டகால விளைவுகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபயாடிக்குகள் உயிர்காக்கும் மருந்துகள் என்றாலும், அவற்றின் தவறான பயன்பாடு குடல் நுண்ணுயிரியல் சமநிலையைச் சீர்குலைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி, புற்றுநோய் உள்ளிட்ட பல தீவிர நோய்களின் அபாயத்தை அதிகரிக்க கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேம்பட்ட லேப்ராஸ்கோபி மற்றும் அறுவைச் சிகிச்சை புற்றுநோயியல் நிபுணரான டாக்டர் அப்ரித் பன்சால் இதுபற்றிக் கூறுகையில், “ஆன்டிபயாடிக்குகள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதுடன், செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளையும் (Beneficial Microbes) அழித்துவிடுகின்றன. இதன் விளைவாக, குடலின் இயற்கையான சமநிலை பாதிக்கப்பட்டு, ‘மைக்ரோபையோம்’ எனப்படும் நுண்ணுயிர் சமநிலை சீர்குலைகிறது” என்றார்.
சாதாரண சளி, காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகளுக்குக்கூட பலர் ஆன்டிபயாடிக் மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இது எவ்விதப் பலனையும் தராததோடு, குடலில் உள்ள நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல், மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை பாதியிலேயே நிறுத்துவது, குடல் சமநிலையைப் பாதித்து, மருந்து எதிர்ப்புத் திறனைத் தூண்டும் ஆபத்தை அதிகரிக்கிறது.
புற்றுநோய் அபாயம் :
குடல் நுண்ணுயிர் சமநிலை சீர்குலையும்போது, ‘டிஸ்பயோசிஸ்’ (Dysbiosis) என்ற நிலை உருவாகிறது. இது உடலில் வீக்கம் (Inflammation), பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, அஜீரணம் மற்றும் நீண்டகால செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. டாக்டர் பன்சால் சமீபத்திய ஆய்வுகளைச் சுட்டிக்காட்டி, தொடர்ந்து ஆண்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்துபவர்களில் பெருங்குடல் புற்றுநோய் (Colorectal Cancer) உள்ளிட்ட புற்றுநோய்களின் அபாயம் அதிகமாகி இருப்பதாகக் கூறுகிறார்.
குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் குறைந்தால், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் கட்டுப்பாடு இல்லாமல் பெருகி, நச்சுகளை உருவாக்குகின்றன. இது நாள்பட்ட அழற்சியை உண்டாக்கி, திசுக்களை சேதப்படுத்தி, அசாதாரண செல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதுவே புற்றுநோய் உருவாவதற்கான சூழலையும் உருவாக்கும்.
மேலும், ஆண்டிபயாடிக் அதிகப்படியான பயன்பாட்டின் மற்றொரு பெரிய விளைவு, ஆன்டிபயாடிக் எதிர்ப்புத் திறன் கொண்ட பாக்டீரியாக்களின் உருவாக்கம் ஆகும். இந்தப் பாக்டீரியாக்கள், சாதாரண சிகிச்சைகளுக்குக் கட்டுப்படாமல், உயிருக்கு ஆபத்தான தீவிரத் தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. இது உலகளாவிய பொது சுகாதார சவால்களில் ஒன்றாகும்.
மருத்துவரின் பரிந்துரைகள் :
* மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது.
* சாதாரண வைரஸ் தொற்றுகளுக்கு ஆன்டிபயாடிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
* மருத்துவர் அறிவுரைப்படி, மருந்துகளின் அளவை முழுமையாக எடுத்து முடிக்க வேண்டும்.
* குடல் சமநிலையை மீட்டெடுக்க, நார்ச்சத்து நிறைந்த உணவுகள், புரோபயாடிக் உணவுகள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம்.
டாக்டர் அப்ரித் பன்சால் கூறுவது போல, இன்று நாம் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பொறுப்புடன் பயன்படுத்தினால் மட்டுமே, நமது ஆரோக்கியத்தையும், எதிர்காலத் தலைமுறைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும்.



