10,000 அடிகள் என்பது பல ஆண்டுகளாக உலகளாவிய உடற்பயிற்சியின் அளவுகோலாக மாறிவிட்டது. சுமார் 5 மைல் நடைப்பயணம் செய்யும் அளவுக்கு இது சமம். ஸ்மார்ட்போன் மற்றும் ஃபிட்னஸ் வாட்ச் பயன்பாடுகள் இந்த இலக்கை தினமும் கண்காணிக்க எளிதாக்கியதால், இது மேலும் பிரபலமானது.
இந்த இலக்கை அடைவதில் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பது மறுக்க முடியாத உண்மை. எடை கட்டுப்பாடு, இதய ஆரோக்கியம், மனநலம் ஆகியவற்றில் 10,000 அடிகள் உதவுகிறது. இதய நோய், நீரிழிவு, மனச்சோர்வு அபாயங்கள் குறைவதாக பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
2022-ல் இங்கிலாந்தில் 78,430 பேருடன் நடத்தப்பட்ட ஒரு முக்கிய ஆய்வு, தினசரி அடிகள் மற்றும் டிமென்ஷியா அபாயத்தை மதிப்பிட்டது. அந்த ஆய்வு, தினமும் சுமார் 9,800 அடிகள் டிமென்ஷியா அபாயத்தை குறைக்க சிறந்ததாக இருக்கலாம் என்றும், குறைந்தபட்சமாக 3,800 அடிகள் நடப்பதே 25% அபாயக் குறைப்பு தரும் என்றும் தெரிவித்தது.
இது “10,000 அடிகள் இல்லாவிட்டாலும் பயன் உண்டு” என்பதைதான் உணர்த்துகிறது. ஆனால், மூட்டு பிரச்சினைகள் உள்ளவர்கள், வயதானவர்கள் அல்லது நேரக் கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு 10,000 அடிகள் என்பது ஒரு மணி நேரத்திற்கும் மேலான பயிற்சி ஆகிவிடுகிறது. அனைவருக்கும் அது சாத்தியமில்லை என்பதே நிஜம்.
இந்த இடத்தில்தான், ஜப்பானில் உருவாக்கப்பட்ட IWT (Interval Walking Training) என்ற நடைபயிற்சி முறை கவனம் பெறுகிறது. இது “அடிகளை எண்ணும் பயிற்சி” அல்ல; இதயத் துடிப்பை (Intensity) மையமாகக் கொண்ட பயிற்சி. 3 நிமிடம் மெதுவாக நடக்க 3 நிமிடம் வேகமாக நடக்க இதை மாறி மாறி செய்து மொத்தம் 30 நிமிடம் நடக்க வேண்டும். இந்த முறையின் நோக்கம், குறைந்த நேரத்தில் இதய செயல்பாட்டை அதிகரித்து, கலோரி எரிப்பையும் உடற்தகுதியையும் மேம்படுத்துவது.
ஒப்பீட்டளவில் பார்க்கும் போது, ஜப்பானிய இடைவெளி நடைபயிற்சி பல அம்சங்களில் முன்னிலை பெறுகிறது. ரத்த அழுத்தக் கட்டுப்பாடு, பக்கவாத அபாயக் குறைப்பு, மனநிலை மேம்பாடு, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பு மற்றும் தூக்கத்தின் தரம் மேம்பாடு போன்ற பலன்களை இந்த முறை வழங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் மற்றும் நடுத்தர வயதினருக்கு இது ஒரு பயனுள்ள, நடைமுறைசாலியான உடற்பயிற்சி முறையாக கருதப்படுகிறது.



