Dude திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இளையராஜாவின் கருத்த மச்சான் பாடலை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படத்தில் இளையராஜாவின் கருத்த மச்சான் பாடல் பயன்படுத்தப்பட்டிருக்கும்.. இதனால், அந்த இளையராஜா பாடல் மீண்டும் வைரல் ஆனது. Dude திரைபடத்தில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ள பாடல்களை நீக்க கோரி இசையமைப்பாளர் இளையராஜா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் தனது அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறி பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாடலை உருமாற்றி உள்ளனர். பாடலுக்கான உரிமை தங்களிடம் உள்ளது. தங்கள் பாடல்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டனர்.
அப்போது, “30 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த பாடல்களை தற்போதும் கூட கேட்டு ரசிக்கின்றனர். இதனால் இளையராஜா எவ்வாறு பாதிக்கப்படுகிறார்?” என்றும், பழைய பாடல்களை பயன்படுத்துவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது” என்றும் நீதிபதி குறிப்பிட்டார். மேலும், படம் திரையரங்கிலும் ஓ.டி.டி தளங்களிலும் வெளியாகும் வரை அமைதியாக இருந்துவிட்டு தற்போது இந்த வழக்கை தாக்கல் செய்தது ஏன் என இளையராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது Dude திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இளையராஜாவின் கருத்த மச்சான் பாடலை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருத்த மச்சான் பாடலை நீக்க 7 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டுமென்ற dude பட நிறுவனத்தின் கோரிக்கை நிராகரித்த நீதிமன்றம், இளையராஜா பாடல்களின் புனிதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் dude படத்தில் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஐகோர்ட் தெரிவித்துள்ளது.



