முருகப்பெருமானுக்கு உலகம் முழுவதும் பல கோவில்கள் இருந்தாலும், பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதும் காவடி எடுத்தல், அலகு குத்துதல், பால் மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தல் போன்ற வழக்கமான வழிபாடுகளையே மேற்கொள்வது வழக்கம். ஆனால், தமிழ்நாட்டிலேயே ஒரு முருகன் கோவிலில் நைவேத்தியமாக சுருட்டுப் படைத்து வழிபடும் வினோத வழக்கம் பின்பற்றப்படுகிறது என்றால் நம்புவது கடினம்.
சுருட்டு படைக்கும் வழக்கம் தோன்றியது எப்படி..?
வழக்கமாக, முனீஸ்வரர் அல்லது கருப்பசாமி போன்ற தெய்வங்களுக்கே சுருட்டு, சாராயம் போன்ற பொருட்கள் படைக்கப்படும். ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் விராலிமலை முருகன் கோவில் முருகனுக்குச் சுருட்டுப் படைக்கப்படுகிறது.
இந்த முருகன் கோவில் கட்டுவதற்கான பணிகள் நடந்து வந்தபோது, கருப்பமுத்து என்ற தீவிர முருக பக்தர் அதில் பணியாற்றினார். ஒருநாள், பலத்த மழையும் சூறாவளிக் காற்றும் வீசியதால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோவிலுக்குச் செல்ல வழியில்லாமல் தவித்த கருப்பமுத்து, குளிரைத் தாங்க ஒரு சுருட்டைப் பற்ற வைத்தபடி, மனமுருக முருகனிடம் வழிகாட்டுமாறு வேண்டினார்.
அப்போது, குளிரில் நடுங்கியபடி ஒருவர் அருகில் வந்து நின்றார். அக்கறை கொண்ட கருப்பமுத்து, அவருக்கும் குளிருக்கு இதமாக இருக்கும் என்று சொல்லி ஒரு சுருட்டைப் பற்றவைத்துக் கொடுத்துள்ளார். பிறகு, இருவரும் சேர்ந்து பத்திரமாக ஆற்றைக் கடந்துள்ளனர். கோவிலை அடைந்ததும் கருப்பமுத்து திரும்பிப் பார்த்தபோது, அந்த நபரை அங்கே காணவில்லை. ஆனால், கோவிலுக்குள் உள்ள முருகன் சன்னதியில், தான் கொடுத்த சுருட்டு இருப்பதைக் கண்டார். தனக்கு வழிகாட்ட வந்தது முருகனே என்பதைப் புரிந்து கொண்ட அவர், இந்தத் தகவலை அனைவரிடமும் சொன்னார். அன்றிலிருந்து அந்த முருகன் கோவிலில் சுருட்டுப் படைத்து வழிபடும் முறை ஏற்பட்டது.
மன்னரின் தடையை நீக்கிய முருகன் :
இதற்கிடையில், புதுக்கோட்டையை ஆண்ட ஒரு மன்னர் இந்தச் சுருட்டுப் படைக்கும் முறைக்கு ஒருமுறை தடை விதித்தார். அதனால், அவரது கனவில் சென்று தரிசனம் தந்த முருகன், “சுற்றி இருப்பவர்களிடம் அன்பு செலுத்தும் பண்பின் அடையாளமாகவே நான் சுருட்டை ஏற்றுக் கொள்கிறேன். இது அன்பு மற்றும் கருணையின் அடையாளமே தவிர, புகைப்பிடிப்பதை ஊக்குவிக்கும் நோக்கம் கிடையாது. அதனால் சுருட்டுப் படைப்பதற்குத் தடை விதிக்காதே” எனக் கூறி மறைந்தார். இதையடுத்து மன்னரும் தடையைத் திரும்பப் பெற்றார். அன்று முதல் இன்று வரை, இந்த வினோத வழக்கம் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.
விராலிமலை முருகனின் சிறப்பு :
இந்த வினோத நடைமுறை கொண்ட கோவில் தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகில் உள்ள விராலிமலை முருகன் கோவில் தான். சுருட்டு படைக்கும் வழக்கத்துடன், இந்தக் கோவிலில் மற்றொரு சிறப்பு வழிபாடும் உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வேண்டிக்கொண்டு குழந்தை பிறந்த பிறகு, அந்தக் குழந்தையை முருகனுக்குத் தத்துக் கொடுத்துவிடுவார்கள். பிறகு, அந்தக் குழந்தையின் மாமா அல்லது சித்தப்பா முறையில் இருப்பவர்கள், அங்குள்ள ஆறுமுகனாருக்குத் ‘தவிட்டை’ (நெல் உமி) கொடுத்துவிட்டு, அக்குழந்தையை மீண்டும் வாங்கிக் கொண்டு செல்லும் ஒரு நெகிழ்ச்சியான பழக்கமும் இன்றும் உள்ளது.
Read More : கார்த்திகை பௌர்ணமி கிரிவலம் எப்போது செல்ல வேண்டும்..? தேதி, நேரம், பலன்கள் இதோ..!!



