நெல்லையை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர், தனது முதல் திருமணம் மற்றும் இரண்டு குழந்தைகளை மறைத்து, இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி ஊழியரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணமான சில நாட்களிலேயே உண்மை வெளியாகி, இரண்டு கணவர்களையும் இழந்து, குழந்தைகளுடன் நிர்க்கதியாய் நின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரத்தைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமாகி, 15 வயதில் மகளும், 13 வயதில் மகனும் உள்ளனர். இவர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தனது குழந்தைகளைச் சொந்த ஊரில் பெற்றோரின் பராமரிப்பில் விட்டுவிட்டுச் சென்னையில் இருந்த இவருக்கு, கடந்த ஓராண்டுக்கு முன்பாக நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலத்தைச் சேர்ந்த 35 வயது ஐ.டி. ஊழியர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாகப் பழக்கம் ஏற்பட்டது. அந்த இளைஞர் பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார்.
தான் திருமணமானவர் என்பதை மறைத்த அந்தப் பெண், இளைஞரிடம் தனக்கு 30 வயது மட்டுமே ஆவதாகவும், தான் திருமணமாகாதவர் என்றும் கூறிப் பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இளைஞர் அந்தப் பெண் மீது காதல் வயப்பட்டுள்ளார். தமது காதல் விவகாரம் குறித்துப் பெற்றோரிடம் எடுத்துக் கூறி சம்மதம் வாங்கிய நாமக்கல் இளைஞர், கடந்த நவம்பர் 30ஆம் தேதி பாண்டமங்கலம் காசி விஸ்வநாதர் கோயிலில் மகாஸ்ரீயைத் திருமணம் செய்து கொண்டார்.
மணமகன் வீட்டில் திரளானோர் கலந்து கொண்டாலும், மணமகள் தரப்பில் ஒருசிலர் மட்டுமே பங்கேற்றனர். திருமணப் புகைப்படங்களை இருவரும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர். இந்த இன்ஸ்டாகிராம் பதிவுகளைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண்ணின் முதல் கணவர், தனது உறவினர்களை அழைத்துக்கொண்டு, சிவந்திபுரத்தில் இருந்த தனது மகனையும் மகளையும் அழைத்துக் கொண்டு, பாண்டமங்கலத்தில் உள்ள இரண்டாவது கணவர் வீட்டிற்குச் சென்றார். அங்குத் திடீரெனச் சென்று, தனக்குத் தெரியாமல் 2வது திருமணம் செய்த தனது மனைவியை சரமாரியாகத் தாக்கினார்.
திடீரெனப் புதுப்பெண்ணை தாக்கியதால் அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார், விசாரித்தபோதுதான், ‘அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது, இவர்தான் முதல் கணவர், இவர்கள் இருவரும் இவளுடைய குழந்தைகள்’ என்ற அதிர்ச்சியான தகவல் வெளியானது. இதையடுத்து, அனைவரும் பரமத்தி வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, இரண்டாவது கணவரான ஐடி ஊழியர், “என்னை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்ட இவள் எனக்கு வேண்டாம்.
இவளுக்காக இதுவரை சுமார் 5 லட்சம் ரூபாய் செலவு செய்து ஏமாந்துவிட்டேன்” என்று கூறி, அந்தப் பெண்ணிடம் இருந்து 5 பவுன் தாலிச் சங்கிலியைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, தன் உறவினர்களுடன் புறப்பட்டுச் சென்றார். அதேபோல, முதல் கணவரும் “இரண்டாவது திருமணம் செய்துகொண்ட இந்தப் பெண் எனக்கும் வேண்டாம்” என்று கூறிவிட்டு, குழந்தைகளை அங்கேயே போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார்.
தனது ஆசையால், ஒரே நேரத்தில் இரண்டு கணவர்களையும் இழந்த அந்தப் பெண், குழந்தைகளுடன் நிர்க்கதியாய் நின்றார். இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்த போலீஸார், குழந்தைகளுடன் அந்தப் பெண்ணை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
Read More : இனி ஃபோனில் ‘Hello’ சொல்லாதீங்க..!! AI-ஐ வைத்து நடக்கும் மெகா மோசடி..!! சைபர் கிரைம் எச்சரிக்கை..!!



