இன்றைய உலகம் உடல் எடையை குறைப்பதை “ஆரோக்கியம்”, “அழகு”, “நாகரிகம்” என்ற பெயர்களில் அளவிட்டு வருகிறது. ஜிம், டயட், கலோரி, ஃபிட்னஸ் என நகர வாழ்க்கை முழுவதும் உடல் பருமனை ஒரு குறையாகவே வரையறுக்கிறது. ஆனால், ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டில் உள்ள ஓமோ பள்ளத்தாக்கில் வாழும் போடி பழங்குடியின மக்களின் வாழ்வியலும், அவர்கள் கொண்டாடும் ‘கேல் திருவிழா’வும், விசித்திரமாக தோன்றுகிறது.
போடி பழங்குடியினரின் பார்வையில் உடல் பருமன் என்பது சோம்பல் அல்லது நோயின் அறிகுறி அல்ல. மாறாக, அது ஆண்மையின் அடையாளம், சமூக மரியாதையின் உச்சம், வெற்றியின் சின்னம். ஆண்டுதோறும் நடைபெறும் ‘கேல் திருவிழா’வில் மிக அதிக உடல் பருமனை அடைந்த ஆண் ஒருவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார். அந்த வெற்றியாளர், ஒரே நாளில் ஒரு சமூகத்தின் “ஹீரோ”வாக உயர்த்தப்படுகிறார்.
ஆனால் இந்த வெற்றி சுலபமானதல்ல. வேட்டையாடி உயிர் வாழும் வாழ்க்கை முறையைக் கொண்ட போடி பழங்குடியினரில் இயற்கையாகவே கொழுப்பு சேர்வது அரிது. அதனால், போட்டியாளர்கள் ஆறு மாதங்களுக்கு முன்பே கடுமையான பயிற்சியை தொடங்குகின்றனர். தனியாக குடில்களில் தங்க வைக்கப்படுவது, உடல் உறவுகளைத் தவிர்ப்பது, சூரியன் உதித்தவுடன் பசு ரத்தம் மற்றும் பால் கலந்த பானத்தை அருந்துவது என, வினோத வழக்கத்தை பின்பற்றுகின்றனர்.
காலையில் சூரியன் விடிந்தவுடன் அவர்களுக்கு பால் கலந்த பசு ரத்தம் வழங்கப்படும். தினமும் ஒவ்வொரு பசுவிலிருந்தும் சிறு துளையிடப்பட்டு ரத்தம் எடுக்கப்படும். பின்னர் அந்த துளை களிமண் கொண்டு அடைக்கப்படும். இந்த ரத்தத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குடித்துவிட வேண்டும். இல்லையெனில் ரத்தம் உறைந்துவிடும்.
போட்டிக்கு தயாராகும் இந்த காலகட்டங்களில் இவர்களுக்கு பணிவிடை செய்ய பெண்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். இவர்கள் போட்டியாளர்களுக்கு மது கொடுத்து, அவர்களின் வியர்வையை துடைத்துவிட்டு, தூங்காமல் இருக்க பாடல்களையும் பாடுவார்கள். ஆக இதையெல்லாம் அனுபவித்து, அதிக உடல் பருமனை அடைபவர்கள்தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள்.
போட்டியில் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டுவிட்டால் அவர் தன் அடுத்த ஆண்டு முழுக்க அக்கூட்டத்தின் ஹீரோவாக கருதப்படுவார். இவரை திருமணம் செய்துகொள்ள அக்குழுவின் பெண்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் இப்படி போட்டி நடைபெறும். போட்டி முடிந்த பின்னர் சில நாட்களில் அந்த ஹீரோவின் எடை குறைந்துவிடும். பெரிய தொப்பை உள்ளவர்களுக்கே திருமணம் செய்து வைக்கும் வழக்கமும் இந்த மக்களிடம் உள்ளது.



