திருப்பரங்குன்றம் தீப வழக்கில், மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டார்.. மேலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான முழு பாதுகாப்பையும் காவல்துறை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்..
இதற்கு எதிராக கோயில் நிர்வாகம் சார்பில் செவ்வாய்க் கிழமை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.. ஆனால் இந்த மனு நேற்று விசாரணைக்கு வரவில்லை..
இந்த நிலையில் திருப்பரங்குன்ற மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்து மேல் முறையீட்டு வழக்கை இரு நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.. மத்திய தொழில் பாதுகாப்பு படையை அழைத்ததில் தவறு இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்து நீதிபதிகள் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்..
இந்த நிலையில் இந்த உத்தரவு, இந்து விரோத திமுக அரசுக்குக் கிடைத்தது சவுக்கடி என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்..
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியின் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.. இந்த அரசாங்கம் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது, போலி மதச்சார்பின்மைக்காகவும் தேர்தலுக்காகவும் இந்த அரசாங்கம் செயல்படுகிறது..
திருப்பரங்குன்றம் தீபத்தூணை எல்லைத்தூண் என்று அரசு வழக்கறிஞர் சொல்லிருக்கிறார்.. அரசு வழக்கறிஞர் படித்திருக்கிறாரா? அவருக்கு அறிவு இருக்கிறதா என்று தெரியவில்லை.. எல்லைத்தூண் என்றால் அது 4 பக்கமும் இருக்கும். தீபத்தூண் என்றால் ஒரு பக்கம் மட்டுமே இருக்கும்.. எனவே போலி மதச்சார்பின்மையால் தான் இந்த அரசாங்கம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.. ஆனால் அரசாங்கம் முடிவுக்கு வரப் போகிறது.. அதற்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது..” என்று தெரிவித்தார்..
மேலும் தனது எக்ஸ் பக்க பதிவில் “ திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து திமுக அரசு பதிந்த மேல்முறையீட்டு மனுவைச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து நீதியை நிலைநாட்டியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. திமுக அரசு கடமையைச் செய்யத் தவறியதைச் சுட்டிக்காட்டியதோடு, ஏதோ ஒரு உள்நோக்கத்துடனேயே வழக்கைத் தொடர்ந்துள்ளது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது தமிழர்களின் பண்பாட்டு உரிமையைப் பறிப்பதற்காகவே திமுக அரசு வழக்கு பதிந்துள்ளதை உறுதி செய்கிறது. இன்று உயர்நீதிமன்றக் கிளையிடம் பெற்ற சவுக்கடி தீர்ப்புக்குப் பிறகாவது தனது இந்து மத வெறுப்புணர்வை திமுக அரசு மூட்டை கட்டி வைக்க வேண்டும். ஆட்சிக் கட்டிலில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் கிளம்ப வேண்டிய இறுதி கட்டத் தருணத்திலாவது இந்து மக்களின் உணர்வுகளிலும் வழிபாட்டு உரிமையிலும் வீண் வம்போடு தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்!” என்று பதிவிட்டுள்ளார்..



