இங்கிலாந்தின் நார்த் யார்க்ஷயரின் ஸ்கார்பரோவைச் சேர்ந்தவர் கிர்ஸ்டி போர்டோஃப்ட். 3 குழந்தைகளின் தாயான இவர், சமீபத்தில் தனது பாட்னர் ஸ்டூவுடன் வீட்டில் டின்னருக்கு பிளான் போட்டிருந்தார். ஆனால், சில மணி நேரத்திற்குப் பிறகு, அவர் சோபாவில் உயிரற்ற உடலாகக் கண்டெடுக்கப்பட்டார். உடனடியாக மருத்துவர் அழைக்கப்பட்டனர். மருத்துவர்கள் தீவிர முயற்சி எடுத்த போதிலும் அவரை முதலில் காப்பாற்ற முடியவில்லை.
தொடர்ந்து டாக்டர்கள் முயன்ற நிலையில், சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு மருத்துவர்கள் அவரை காப்பாறினர். இதன் மூலம் சுமார் 40 நிமிடங்கள் உயிரற்ற உடலாக இருந்த அந்த பெண் மீட்கப்பட்டுள்ளார். இந்த இடைப்பட்ட நேரத்தில் கிர்ஸ்டி தான் பல்வேறு விஷயங்களைப் பார்த்ததாகக் கூறுகிறார். தனது தோலில் விசித்திரமான வடிவங்களைப் பார்த்தாக அந்த பெண் தெரிவித்தார். அவர் தனது மரண அனுபவம் குறித்து மேலும் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
கிர்ஸ்டிக்கு சுமார் 40 நிமிடங்கள் இதயத் துடிப்பு இல்லாமல் இருந்த நிலையில், அவர் உயிர் பிழைக்கவே வாய்ப்புகள் குறைவு என்று கூறப்பட்டது. இருந்த போதிலும் கடுமையாகப் போராடி மருத்துவர்கள் அவரை காப்பாற்றினர். அவருக்குப் பல முறை மாரடைப்பு மற்றும் கோமா ஏற்பட்ட போதிலும் அனைத்தையும் தாண்டி அவர் உயிர் பிழைத்துள்ளார். இது குறித்து அந்த பெண் மேலும் கூறுகையில், “அன்று இரவு ஏதோ பிரச்சனை இருப்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.
உடலில் ஒரு மாதிரி உணர்வு இருந்தது. இதை நான் ஸ்டூவிடம் கூறினேன். ஆனால், உடல் களைப்பால் அப்படி இருக்கும் என்று அவர் கூறினார். இதனால் நானும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அடுத்த சில மணி நேரத்தில் எனது உடலில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. எனது குடும்பத்தைத் தவிர வேறு யாருக்கும் என்ன நடக்கிறது என்று தெரியாது. அப்போது எனது உடலை விட்டு உயிர் வந்துவிட்டது போல இருந்தது. உடலில் வினோதமான தோற்றங்களைப் பார்க்க முடிந்தது. நான் எனது நண்பரிடம் எனது உடலில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்றெல்லாம் கூற முயன்றது போல இருந்தது.
அந்த நேரத்தில் ஒரு கட்டத்தில் அவ்வளவு தான் இனிமேல் உயிர் பிழைக்கவே முடியாது என்பது போல எனக்குத் தோன்றியது. அப்போது எனது குடும்பத்தினர் மருத்துவர்கள் உதவியுடன் என்னை மீட்டனர். அப்போது எனது நுரையீரல், இதயத்தில் ஏதோ நடப்பது போல இருந்து. அப்போது திடீரென என்னால் மீண்டும் மூச்சுவிட முடிவதை நான் உணர்ந்தேன்” என்று அவர் தெரிவித்தார். கோமாவில் இருந்து மீண்ட பிறகு கிரிஸ்டியின் உடலில் ஸ்கேன் பரிசோதனை செய்துள்ளனர். இருப்பினும், கிரிஸ்டியின் இதயம் அல்லது நுரையீரலில் எந்தவொரு பாதிப்பும் இல்லை. இதுவே அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்துள்ளது. அவர் தனது மரணம் குறித்து அங்குள்ள ஊடகங்களில் தனது அனுபவத்தைப் பகிர்ந்த நிலையில், அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.