விழுப்புரம் அருகே புதுச்சேரி எல்லையில் உள்ள மடுகரை பகுதியில், தன்னுடைய மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த சக ஊழியரை, கணவரே மது அருந்த அழைத்துச் சென்று கழுத்தைக் கிழித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் குமார் என்பவர், தன் குடும்பத்துடன் தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லையான மடுகரை பகுதியில் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள தனியார் பிளைவுட் கம்பெனியில் வேலை செய்துவரும் சுராஜ்குமார், தன்னுடன் பணிபுரியும் பப்பு என்பவருடன் நெருக்கமாகப் பழகி வந்துள்ளார்.
இந்தச் சூழலில், சக ஊழியரான பப்புவுக்கும், சுராஜ் குமாரின் மனைவிக்கும் இடையே திருமணத்தை மீறிய கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இந்த விவகாரம் சுராஜ் குமாருக்குத் தெரியவர, அவர் பப்புவுடன் பலமுறை சண்டையிட்டுள்ளார். இருப்பினும், இருவரும் கள்ளத்தொடர்பை கைவிடாமல் தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.
பப்புடனான கள்ளத்தொடர்பை நிறுத்த முடியாத ஆத்திரத்தில் இருந்த சுராஜ்குமார், ஒரு திட்டம் தீட்டினார். பப்புவை மது அருந்த அழைத்துள்ளார். புதுச்சேரி எல்லையில் உள்ள மோட்சக்குளம் பகுதியில் புதிதாகப் போடப்பட்ட மனைப் பிரிவுக்கு இருவரும் சென்று மது அருந்தியுள்ளனர்.
அப்போது, சுராஜ் குமார், பப்புவுடன் மீண்டும் சண்டை போடத் தொடங்கினார். அந்த சமயம், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துப் பப்புவின் கழுத்தில் குத்தியதுடன், கழுத்தை சரமாரியாக கிழித்து கொலை செய்துள்ளார். இதனால் பப்பு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
கொலைக்கு பின், சுராஜ், தனது மனைவிக்கு செல்போன் மூலம் அழைத்து, “பப்புவின் கழுத்தைக் கத்தியால் கிழித்துக் கொலை செய்துவிட்டேன்” என்று கூறியுள்ளார். இதனால் அலறி அடித்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்த சுராஜின் மனைவி கதறி அழுவதைக் கண்ட அந்த வழியாகச் சென்றவர்கள் உடனே போலீஸுக்குத் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பப்புவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், கொலையைச் செய்துவிட்டுத் தலைமறைவான சுராஜ் குமாரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Read More : 400 இண்டிகோ விமானங்கள் ரத்து..!! அதிர்ச்சியில் பயணிகள்..!! எப்போது சீராகும்..? வெளியான பரபரப்பு தகவல்..!!



