ரஷ்ய அதிபர் புடின் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.. நேற்று மாலை 7:30 மணியளவில் பாலம் விமான நிலையத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் நரேந்திர மோடி ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர் இருவரும் ஒரே காரில் பயணித்தனர். பிரதமர் மோடி ஜனாதிபதி புடினுக்கு அவரது இல்லத்தில் இரவு விருந்தளித்தார்.
இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பில் புடின் உரையாற்றினார்.. அப்போது “இந்தியாவின் வளர்ச்சிக்குத் தேவையான எண்ணெய், எரிவாயு, நிலக்கரி உட்பட எதையும் ரஷ்யா நம்பகமாக வழங்கும் நாடு.” என்று தெரிவித்தார்..
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து எரிபொருள் வழங்குவோம் என்று மீண்டும் உறுதி தெரிவித்துள்ளார்.புடினின் இந்த அறிவிப்பு, அமெரிக்கா இந்தியாவை ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை குறைக்க அழுத்தம் கொடுக்கும் நேரத்தில் வந்துள்ளது.
பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவுக்கு நீண்டகால எரிபொருள் தேவைகளை ரஷ்யா பூர்த்தி செய்யத் தயாராக உள்ளதாக புடின் மேலும் தெரிவித்தார். “வேகமாக வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்திற்குத் தேவையான எரிபொருளை இடையறாது வழங்க ரஷ்யா தயாராக உள்ளது.” என்று கூறினார்.
இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவையும் புடின் பாராட்டினார், இந்திய ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதில் மாஸ்கோவின் தொடர்ச்சியான பங்கை எடுத்துக்காட்டினார். மேலும், ”கடந்த அரை நூற்றாண்டாக, நமது நாடு, வான் பாதுகாப்புப் படைகள், விமானப் போக்குவரத்து மற்றும் கடற்படை உள்ளிட்ட இந்திய இராணுவத்தை ஆயுதபாணியாக்கவும் நவீனப்படுத்தவும் உதவி வருகிறது. பொதுவாக, நாங்கள் சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவுகளில் நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி திருப்தி அடைகிறோம்… தற்போதைய வருகையும் எட்டப்பட்ட ஒப்பந்தங்களும் நமது நாடுகள் மற்றும் மக்களின் நலனுக்காக, இந்தியா மற்றும் ரஷ்யாவின் மக்கள் நலனுக்காக ரஷ்ய-இந்திய மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்த உதவும் என்று நான் நம்பிக்கையுடன் தெரிவிக்க முடியும்.” என்று கூறினார்..
Read More : விமானிகளின் ஓய்வு விதியை வாபஸ் பெற்ற DGCA! இண்டிகோ குழப்பத்திற்கு மத்தியில் புதிய உத்தரவு!



