கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த வால்பாறையில், வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவனை சிறுத்தை கவ்விச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு சிறுவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டு, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
வால்பாறை பகுதியில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ள நிலையில், தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஐயர்பாடி தேயிலை தோட்டத்தில் நான்கு வீடுகளை கொண்ட தொழிலாளர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்புல் அலி – ஷாஜிதா தம்பதி தங்கி தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு 7.15 மணி அளவில் ராஜ்புல் அலியின் மகள் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தனர். பெற்றோர் வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்த வேளையில், திடீரென வந்த சிறுத்தை, 5 வயதான ‘சைஃபுல் ஆலம்’ என்ற சிறுவனை கவ்வி சென்று தேயிலை தோட்டத்துக்குள் இழுத்துச் சென்றது.
மற்ற குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டுப் பக்கத்து வீட்டுப் பெண் ஓடி வந்து பார்த்தபோது, சம்பவம் நடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தேயிலை தோட்ட அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, ரேஞ்சர் தலைமையிலான வனத்துறை குழு சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டது. நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு, சிறுவனின் உடல் தேயிலை தோட்ட புதரில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
முன்னதாக, இதே எஸ்டேட்டில் 2025 ஜூன் மாதத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமியையும் சிறுத்தை கவ்விச் சென்று உயிரிழந்தாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். வால்பாறை பகுதியில் தொடர்ந்து வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் வனவிலங்குகள் தாக்கி உயிரிழக்கும் சம்பவம் அங்கு வாழும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து.. 5 மடங்கு உயர்ந்த விமான டிக்கெட்டால் பயணிகள் அவதி..!!



