2026 சட்டசபை தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இதனிடையே ஆட்சி அதிகாரத்தில் பங்கு, என காங்கிரஸ் கட்சியினர் கூறி வருவது திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காங்கிரஸ் அமைத்த ஐந்து பேர் கொண்ட குழு தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் திமுகவிடம் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அதாவது 75 சட்டமன்ற தொகுதிகள், 40 தொகுதிகளுடன் அமைச்சரவை பதவிகள், 30 தொகுதிகளுடன் 5 மாநிலங்களாக இடங்கள் என மூன்று கோரிக்கைகளை முன் வைத்துள்ளது திமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
75 தொகுதிகள் வழங்குவது கூட்டணியின் சமநிலையை முற்றிலும் மாற்றிவிடும் எனவும் காங்கிரஸ் ஆதிக்கத்தை அதிகரிக்கும் என்றும் திமுகவில் பலரும் கூறி வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் காங்கிரஸ் செல்வதற்கான சிக்னலாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கடந்த 5ம் தேதி, தவெக தலைவர் விஜயை, பனையூர் இல்லத்தில் காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு குழுத் தலைவர் பிரவின் சக்ரவர்த்தி சந்தித்து தவெக-காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசியது திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது, விஜயிடம், 125 தொகுதிகளின் பட்டியலை வழங்கி அதிலிருந்து 75 தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. தேர்தல் நெருங்க இருக்க இது போன்ற கருத்துக்கள் வலுவடையும் என்றும் விஜய் உடன் காங்கிரஸ் நெருக்கமாக இருப்பதால் கடைசி நேரத்தில் கூட காங்கிரஸ் தவெக பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளதாவும் கூறப்படுகிறது.



