விஜய் பொதுக்கூட்டம் நடைபெறும் உப்பளம் துறைமுகம் மைதானத்திற்குள் கைத்துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் நடிகர் விஜயின் தவெக கட்சி போட்டியிட உள்ளது. இதற்கான பிரசாரத்தை தமிழகத்தில் விஜய் தொடங்கினார். ஆனால் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் தனது பிரசாரத்தை ரத்து செய்தார். பனையூரில் உள்ள அலுவலகத்தில் மட்டும் நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டார்.
கரூர் சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தமிழக வெற்றிக் கழகம் மீண்டும் பரப்புரை பொதுக்கூட்டம் நடத்த உள்ளது. இந்த முறை விஜய் புதுச்சேரியை குறிவைத்துள்ளார். அதன்படி புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணிவரை பொதுக்கூட்டம் நடத்திட போலீசார் அனுமதி அளித்துள்ளனர். த.வெ.க. கட்சி சார்பில் தொண்டர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தொண்டர்கள் ‘பாஸ்’ வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி காலை முதலே தொண்டர்கள் பரப்புரை நடைபெறும் மைதானதிற்கு வரத் தொடங்கியுள்ளனர். மைதானத்திற்கு வரும் நபர்களை சோதனை செய்த பின்னரே போலீசார் உள்ளே அனுமதிக்கின்றனர். அப்போது மைதானத்திற்குள் கைத்துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்தபோது துப்பாக்கியுடன் வந்த நபர் சிக்கினார். சந்தேக நபரை பிடித்து போலீசார் விசாரித்த போது கைத்துப்ப்பாகியை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. துப்பாக்கியுடன் வந்த நபர் சிவகங்கையை சேர்ந்த தவெக நிர்வாகியின் தனி பாதுகாவலர் என தகவல் வெளியாகியுள்ளது. சந்தேக நபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



