ரூ.10 லட்சம் வரையிலான கடன்களுக்கு இனி எந்த விதமான கேரண்டி அல்லது உத்தரவாதமும் கேட்கக் கூடாது என தனியார் கடன் நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் வகையில் தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தனியார் நிதி நிறுவனங்களின் அடாவடி வசூல் மற்றும் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
திடீர் பண நெருக்கடி ஏற்படும் நேரங்களில் வங்கிகளில் கடன் பெறுவதற்கான நடைமுறைகள், ஆவணங்கள் மற்றும் விதிமுறைகள் காரணமாக பொதுமக்கள் தனியார் நிதி நிறுவனங்களை நாடும் நிலை உருவாகியுள்ளது. ஆனால், இந்நிறுவனங்கள் விதிக்கும் அதிக வட்டி, கடுமையான வசூல் முறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் மக்கள் மத்தியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த சூழலில், தனியார் நிதி நிறுவனங்களின் சட்டவிரோத செயல்களை முற்றிலும் தடுக்க தமிழக அரசு ஏற்கனவே புதிய சட்டத்தை கொண்டு வந்திருந்தது. கடன் வசூல் என்ற பெயரில் மக்களை மிரட்டுதல், அவர்களின் சொத்துகளை அபகரிக்க முயற்சித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆனாலும், அடாவடி வசூல் நடைமுறைகள் குறையவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்த நிலையில், தற்போது கூடுதல் கட்டுப்பாடுகளுடன் புதிய விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய விதிகளின்படி, தமிழகத்தில் கடன் வழங்கும் எந்த தனிநபர் அல்லது நிறுவனமும் அரசு ஆன்லைன் போர்ட்டலில் கட்டாயமாக பதிவு செய்திருக்க வேண்டும். இதற்காக ரூ.10 ஆயிரம் பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். நிறுவனத்தின் முழு விவரங்கள் பதிவில் இடம்பெற வேண்டும்.
அளிக்கப்பட்ட தகவல்கள் பொய்யாக இருந்தால், பதிவு உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. புதிய விண்ணப்பங்கள் பெறப்படும் போது, காவல்துறை, வருவாய்துறை மற்றும் குற்றப்பதிவு துறை உள்ளிட்டவை இணைந்து கடன் நிறுவனத்தின் பின்னணி விவரங்களை முழுமையாக சரிபார்ப்பார்கள். விண்ணப்ப பதிவு செய்யப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் பதிவு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சான்றிதழ் வழங்கப்படாவிட்டால், அது தானாகவே வழங்கப்பட்டதாக கருதப்படும். மேலும், வீட்டு மற்றும் குடும்ப தேவைகளுக்காக வழங்கப்படும் ரூ.4 லட்சம் வரையிலான கடன்களுக்கு எந்த கேரண்டியையும் கேட்கக்கூடாது. அதேபோல், சுயஉதவி குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும் கடன்களுக்கு ஜாமீன் அல்லது அடமானம் எதையும் கோரக் கூடாது என அரசு தெளிவாக உத்தரவிட்டுள்ளது.
கடன் பெற்றவர்கள் முழுத் தொகையை திருப்பிச் செலுத்திய பிறகு, 30 நாட்களுக்குள் அவர்களிடம் பெறப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கடன் நிறுவனங்கள் திருப்பி அளிக்க வேண்டும் என்றும் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் கடன் நிறுவனங்களின் தவறான வசூல் நடவடிக்கைகளை கண்காணிக்க, புகார் தீர்க்கும் தீர்ப்பாயம் அமைக்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பாயம், கடனாளிகள் மீதான அச்சுறுத்தல், அதிக வட்டி வசூல், அடாவடி நடவடிக்கைகள் தொடர்பான புகார்களை விசாரிக்கும். இருதரப்பினரையும் அழைத்து பேசி நடுவர் முறையில் தீர்வு வழங்கும் இந்த தீர்ப்பாயம், தேவையானால் காவல்துறை விசாரணைக்கும் பரிந்துரை செய்யும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Read more: ABC juice: குளிர்காலத்தில் இந்த ஒரு ஜூஸை குடித்தால் ஒரு முடி கூட உதிராது.. முகமும் ஜொலிக்கும்..!!



