கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி ரூ.1000 பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் புதிய பயனாளிகளை இணைத்து மேலும் விரிவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வந்தது. இந்த நிலையில், திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, கூடுதல் மகளிர் பயனடையும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் 12ஆம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக விரிவாக்கப்படவுள்ளது. இந்த விரிவாக்கத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம், இதுவரை பயனடையாமல் இருந்த மேலும் பல தகுதியான மகளிர் இத்திட்டத்தின் கீழ் உரிமைத் தொகை பெற வழிவகுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தும் முன்னோடி திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த மகளிரின் வாழ்ந்த அனுபவங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்டுள்ள அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் நிகழ்வு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முன்னிலையிலும் வருகின்ற (12-12-2025) அன்று மாலை 3 மணியளவில் நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் சமூக சேவகியும் மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராக காந்திய வழியில் போரடியவரும் பத்மபூஷன் விருது பெற்றவருமான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் மற்றும் 2022-ஆம் ஆண்டு சீனாவின் காங்சோவில் நடைபெற்ற மாற்றுதிறனாளர் ஆசிய விளையாட்டு பூப்பந்து போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியவருமான துளசிமதி முருகேசன் ஆகியோர் உடன் கலந்து கொள்கின்றனர்.” எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மகளிர் உரிமைத்தொகை இரண்டாம் கட்டமாக விரிவுப்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.



