தமிழ் திரையுலகின் தன்னிகரற்ற சகாப்தமாக ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திகழ்ந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 76-வது பிறந்தநாள் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பல தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த், 1975 ஆம் ஆண்டு ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அன்றிலிருந்து இன்று வரை, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பாக்ஸ் ஆபிஸின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார். நகைச்சுவை, காதல், அதிரடி சண்டைக் காட்சிகள் என அனைத்து உணர்வுகளையும் கலந்து கொடுக்கும் தனித்துவமான பாணிதான் அவருடைய அசைக்க முடியாத வெற்றிக்குக் காரணமாகும்.
வசூலைப் பொறுத்தவரை, ரஜினியின் சாதனைகள் பிரம்மாண்டமானவை. ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘எந்திரன்’ திரைப்படம்தான் முதன்முதலில் ரூ.100 கோடி வசூலை எட்டிய தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. அதைத் தொடர்ந்து, ஷங்கரின் ‘2.0’ திரைப்படம் இன்று வரை ரூ.800 கோடிக்கும் மேல் வசூலைக் குவித்து பிரம்மாண்ட சாதனையாக நீடிக்கிறது.
சமீபத்தில் வெளியான ‘கூலி’ திரைப்படம் கூட ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மட்டுமல்லாமல், ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும் ரஜினிக்குப் பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. குறிப்பாக ‘முத்து’ திரைப்படம் மூலம் அவர் உலக அரங்கில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
170-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ரஜினி, தற்போது ‘ஜெயிலர் 2’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் இந்தப் படம், 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, அவரது நண்பரும் நடிகருமான கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கும் திரைப்படத்திலும் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இதனால், அடுத்த ஆண்டு ரஜினி ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி காத்திருக்கிறது.
இன்று அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘படையப்பா’ திரைப்படம் 4K தொழில்நுட்பத்தில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ள இந்தப் படத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது நிகழ்ந்த சுவாரஸ்யமான அனுபவங்களை ரஜினிகாந்த் சமீபத்தில் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான், ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ரஜினிகாந்த் – வயதை வென்ற வசீகரம். மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம். ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Read More : கடற்கரையில் ஒதுங்கிய மர்ம விலங்கு..!! ஹாலிவுட் படத்துக்கே இன்ஸ்பிரேஷன்..!! அது என்ன உயிரினம் தெரியுமா..?



