மத நல்லிணக்கம், சமுதாய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் “கபீர் புரஸ்கார்” விருது பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழக அரசின் 2026ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. இவ்விருதானது தலா ரூ.20,000/-, ரூ.10,000/- ரூ.5,000/- தகுதியுடையோருக்கு வழங்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத்துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியாளர்கள், சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசு பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் இவ்விருதினைப் பெற தகுதியுடையவராவர்.
மேலும் இவ்விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இன, வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை https://awards/tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இன்று மாலைக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், அப்பாவு நகர், தருமபுரி 636701 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். மேலும், உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



