திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் அமைவதில் ஆண், பெண் என்ற பாகுபாடு இன்றி பலருக்கும் தடை, தாமதம் அல்லது நல்ல வரன் அமையாமல் தட்டிப் போவது போன்ற சிக்கல்கள் நீடிக்கின்றன. இதற்குப் பூர்வ ஜென்ம கர்ம வினைகள் தொடர்வதும் செவ்வாய், வியாழன், சுக்கிரன் போன்ற கிரகங்கள் ஜாதகத்தில் பலவீனமடைந்து தோஷம் ஏற்படுத்துவதும் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன. ஜாதகத்தில் கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்காமல் திருமணம் நடந்தாலும், கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவுகள், நிம்மதியின்மை, கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரிவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு கர்ம வினைகள் அல்லது கிரக தோஷங்களால் திருமணத் தடைகள் நீடிப்பவர்கள், முருகப் பெருமானுக்கு ஒரு எளிய பரிகாரத்தை தினசரி செய்து வந்தாலே தோஷங்கள் விலகி, நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெறும் என்பது சான்றோரின் நம்பிக்கை.
இந்த வழிபாட்டைச் செய்யத் தொடங்குவதற்கு முருகப் பெருமானுக்குரிய விசேஷ நாட்களான செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் வரும் நாட்களைத் தேர்வு செய்வது மிகவும் சிறப்பானது.
வீட்டில் உள்ள முருகன் படத்திற்கு முன்பாக ஒரு நெய் அகல் விளக்கு ஏற்றி வைத்து, தினமும் அதிகாலைப் பொழுதான பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்தக் குறிப்பிட்ட மந்திரத்தை தினமும் 11 முறை கூறி வர வேண்டும். எப்பேர்ப்பட்ட திருமணத் தடை, தாமதம் மற்றும் வரன் அமைவதில் உள்ள பிரச்சினைகள் இருந்தாலும், அவை அனைத்தும் நீங்கி விரைவில் சுபமங்கல நிகழ்வுகள் நடைபெறும் என்று நம்பப்படுகிறது.
சக்திவாய்ந்த குமார தந்திர மந்திரம் :
முருகப் பெருமானுக்குரிய மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களில் ஒன்றான இந்தக் குமார தந்திர மந்திரம், குமார தந்திரத்தில் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. நல்வாழ்வு, பாதுகாப்பு மற்றும் ஆன்மீக ஆற்றலை நிலைநிறுத்துவதற்காக இது உச்சரிக்கப்படுகிறது.
மந்திரம் :
“ஓம் ஹிங் குமாராய நமக ஸ்வாஹா ஹோ கௌரி ஷங்கரார்திஹி யதாத்வம் ஷங்கரப்பிரியா ததா மன் குரு கல்யாணி”
இதில் வரும் ‘ஹிங்’ போன்ற பீஜ மந்திரங்கள் மிக சக்தி வாய்ந்தவை எனக் கருதப்படுவதால், இந்த மந்திரத்தை மிகவும் கவனத்துடனும், பக்தியுடனும், சரியான முறையில் உச்சரித்தால் வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாத அற்புதமான மாற்றங்கள் நிகழும் என்று நம்பப்படுகிறது. சாதாரண நேரங்களை விட, பிரம்ம முகூர்த்த நேரத்தில் நெய் விளக்கு ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை சொல்வது மிக விரைவான பலன்களைத் தரும் என்றும், இந்த மந்திரத்தைச் சொல்வது மட்டுமல்லாமல், எழுதுவதும் கூட மிகவும் நன்மை பயக்கும் என்றும் ஆன்மீக பெரியோர்கள் குறிப்பிடுகின்றனர்.
Read More : OTT தளங்களில் வயதுக்கு மீறிய காட்சிகள்… குழந்தைகளைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை…!



