ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டி பீச் பகுதியில் நடைபெற்ற யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்டத்தில் நடந்த பயங்கர துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமானவர்கள் தந்தை மற்றும் மகன் என போலீஸ் திங்கள்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று மாலை, சுமார் 1,000 பேர் கலந்து கொண்டிருந்த நிகழ்ச்சியில் இருவரும் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறிப்பாக யூதர்களை குறிவைத்த தாக்குதலாக கருதப்படுகிறது.
ஆஸ்திரேலிய ஒலிபரப்பு கழகத்திடம் (ABC) பேசிய அதிகாரிகள் “தாக்குதலில் ஈடுபட்டவர்கள், 24 வயதான நவீத் அக்ரம் மற்றும் அவரது 50 வயது தந்தை சாஜித் அக்ரம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில், 50 வயது தந்தை சாஜித் அக்ரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. 24 வயது மகன் நவீத் அக்ரம், போலீசாரின் பதிலடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து, மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்..
சாஜித் அக்ரம் ஒரு பழ வியாபாரி என்றும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் போலீஸ் கூறியுள்ளது. தாக்குதலுக்கு முன், இருவரும் தங்கள் குடும்பத்தினரிடம் ஜெர்விஸ் கடற்கரைக்கு மீன்பிடிக்க செல்கிறோம் என்று கூறிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கு பதிலாக அவர்கள் பாண்டி பீச்சில் இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் இருவரை உட்பட 40 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களின் வயது 10 முதல் 87 வரை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சிட்னி நகரில் நடைபெற்ற ஒரு மகிழ்ச்சியான ஹனுக்கா நிகழ்ச்சி, கடந்த 30 ஆண்டுகளில் மிகக் கொடூரமான துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் ஒன்றாக மாறியது. தந்தை–மகன் இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதும், கடற்கரையில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் அச்சத்தில் சிதறி ஓடினர். வெயில் காய்ந்த பாண்டி பீச்சில் இருந்தவர்கள் அருகிலுள்ள தெருக்களில் ஒளிந்தனர்.
வீடியோக்களில், அந்த இருவரும் போல்ட்-ஆக்ஷன் ரைஃபிள் மற்றும் ஷாட்கன் போன்ற துப்பாக்கிகளை ஏந்தியபடி சுடுவது பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு நடந்தபோது, பாண்டி பீச்சிற்கு அருகிலுள்ள சிறிய பூங்காவில் நடைபெற்ற ஹனுக்கா நிகழ்ச்சியில் சுமார் 1,000 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
பல உயிர்களை காப்பாற்றிய ரியல் ஹீரோ
அச்சுறுத்தும் சூழலில், ஒரு நபர் அபார துணிச்சலுடன் ஆயுதம் ஏந்தியவர்களில் ஒருவரை பாய்ந்து பிடித்து ஆயுதம் பறித்தார். இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக கருதப்படுகிறது. வீடியோவில் பதிவான இந்த வீரச் செயலை செய்தவர் 43 வயதான பழக்கடை உரிமையாளர் அகமது அல் அகமது. அவர் தாக்குதலின்போது இரண்டு துப்பாக்கி குண்டுகளால் காயமடைந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
திங்கள்கிழமை காலை வரை, அவருக்காக தொடங்கப்பட்ட நிதி திரட்டல் (crowdfunding) தொகை 2 லட்சம் ஆஸ்திரேலிய டாலரை (சுமார் 1.33 லட்சம் அமெரிக்க டாலர்) தாண்டியது.
நேரில் கண்ட அனுபவம்
பாண்டி பகுதியில் வசிக்கும் 27 வயதான மோர்கன் கேப்ரியல், சம்பவத்துக்குப் பிறகான அச்சநிலையை பதிவு செய்துள்ளார். அருகிலுள்ள சினிமாவுக்குச் செல்லும் போது, முதலில் பட்டாசு சத்தம் என நினைத்த வெடிப்பு ஒலிகள் கேட்டதும், மக்கள் திடீரென தெருவில் வெள்ளம்போல் ஓடியதாக அவர் கூறினார்.
மேலும் “நான் ஆறு அல்லது ஏழு பேருக்கு அடைக்கலம் கொடுத்தேன். அவர்களில் இரண்டு பேர் என் நெருங்கிய நண்பர்கள். மற்றவர்கள் தெருவில் இருந்தவர்கள். பலரின் கைபேசிகள் கடற்கரையிலேயே விட்டுவிடப்பட்டன. அனைவரும் உயிர் காக்க ஓடினார்கள்.. இன்று காலை மிகவும் சோகமான நிலை. சாதாரணமாக இங்கு மக்கள் நீந்தவும், சர்ஃபிங் செய்யவும், ஓடவும் கூட்டமாக இருப்பார்கள். இப்போது அசாதாரண அமைதி. சோகமான சூழல் நிறைந்திருக்கிறது,” என்று தெரிவித்தார்.
அரசின் பதில்
ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் திங்கள்கிழமை காலை பாண்டி பீச்சுக்கு வந்து, தாக்குதல் நடந்த இடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். இந்த சம்பவத்தை அவர் “நாட்டின் இருண்ட தருணம்” என்று குறிப்பிட்டார். தாக்குதலின் நோக்கம் என்ன என்பதைக் கண்டறிய பாதுகாப்பு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.



