உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த சீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்குத் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இவருடைய கணவர் பால் வியாபாரம் செய்து வந்தார். தினமும் அதிகாலை 5 மணிக்கு வியாபாரத்திற்குச் சென்றால், இரவு 10 மணிக்கே திரும்புவார். இந்தக் கால அவகாசத்தில், சீதாவுக்கு எதிர் வீட்டில் வசித்த மோகித் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாகத் தொடங்கிய இவர்களது பழக்கம், நாளடைவில் தகாத உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பதை வாடிக்கையாக வைத்திருந்த நிலையில், இந்த விவகாரம் சீதாவின் கணவருக்குத் தெரிய வந்தது. அவர் சீதாவைச் சரமாரியாகத் தாக்கி, கண்டித்துள்ளார்.
கணவரிடமிருந்து எப்படியாவது தப்பித்து மோகித்துடன் சேர்ந்து வாழ விரும்பிய சீதா, “நாம் எங்காவது சென்றுவிடலாம்; உன் மனைவியை விட்டுவிட்டு என்னுடன் வந்துவிடு” என்று மோகித்தை வற்புறுத்தியுள்ளார். இதனால், மோகித் ஒரு கொடூரமான திட்டத்தைத் தீட்டினார்.
மோகித், தன் மனைவியிடம், “எனக்கும் எதிர் வீட்டுப் பெண்ணுக்கும் உள்ள உறவு குறித்துப் பேசியுள்ளார். சீதா என்னிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார். ஆனால், அவர் பணக்காரி. அவளைக் கொன்றுவிட்டு, அவள் வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு எங்கேயாவது சென்று மகிழ்ச்சியாக வாழலாம்” என்று மோசமான யோசனையைக் கொடுத்துள்ளார். கணவரின் இந்த கொடூரத் திட்டத்திற்கு மோகித்தின் மனைவியும் சம்மதித்துள்ளார்.
திட்டமிட்டபடி, அன்றைய தினம் சீதாவின் கணவர் பால் வியாபாரத்திற்காக அதிகாலையிலேயே சென்றுவிட்டார். மோகித்தின் மனைவி சீதாவிடம் சென்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது பின் வாசல் வழியாக வந்த மோகித், மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் சீதாவைச் சரமாரியாகக் குத்திக் கொலை செய்தார். அதன் பிறகு, அந்தத் தம்பதி இருவரும் அங்கிருந்து தப்பித்து, பக்கத்து கிராமத்தில் பதுங்கினர். வேலை முடிந்து வீடு திரும்பிய சீதாவின் கணவர், தனது மனைவி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சீதாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையைத் தொடங்கிய போலீசார், எதிர் வீட்டில் இருந்த மோகித்தும் அவர் மனைவியும் திடீரெனக் காணாமல் போனதைக் கண்டறிந்தனர். கொலை நடந்த இடத்தில் இருவருடைய துணிகளும் கிடந்ததால், அவர்களின் தொலைபேசி எண்ணை கண்காணித்ததில், பக்கத்து கிராமத்தில் பதுங்கியிருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கள்ளக்காதலைத் தொடர சீதாவைக் கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். கள்ளக்காதல் விவகாரத்தில் பால் வியாபாரியின் மனைவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், வாரணாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



