இங்கிலாந்தைச் சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர், தான் 11 நிமிடங்கள் மருத்துவ ரீதியாக இறந்ததாகவும் அந்த நேரத்தில் சொர்க்கத்தையும் நரகத்தையும் அனுபவித்ததாகவும் கூறி, மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
சார்லட் ஹோம்ஸ் என்ற அந்த பெண், இது ஒரு சாதாரண இதய பரிசோதனையாகவே தொடங்கியதாக தெரிவித்துள்ளார். ஆனால் பரிசோதனையின் போது, அவரது இரத்த அழுத்தம் திடீரென 234/134 என்ற உயிருக்கு ஆபத்தான அளவிற்கு உயர்ந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள், அவரது ரத்த அழுத்தம் உடனடியாக கட்டுப்படுத்தப்படாவிட்டால், பக்கவாதம் (Stroke) அல்லது மாரடைப்பு (Heart Attack) ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்தனர்.
11 நிமிடங்கள் மருத்துவ ரீதியாக இறந்த நிலை
மருத்துவர்கள் ரத்த அழுத்தத்தை குறைக்க தீவிரமாக முயன்றபோது, சார்லட் ஹோம்ஸின் நிலை மிகவும் மோசமானதாக மாறியது. பின்னர், அவர் 11 நிமிடங்கள் முழுவதும் மருத்துவ ரீதியாக உயிரற்ற நிலையில் இருந்ததாக தெரிந்ததாக கூறினார். அந்த 11 நிமிடங்களில் தாம் அனுபவித்ததாக அவர் கூறும் விஷயங்கள், தன் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாதவை என சார்லட் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சார்லட் ஹோம்ஸ், தனது மரணத்தை நெருங்கிய அனுபவம் முதலில் நரகமாகத் தோன்றிய ஒரு காட்சியுடன் தொடங்கியதாக கூறினார். அது மிகுந்த வேதனை, துன்பம் நிறைந்த இடமாக இருந்ததாகவும், அந்த பகுதியைப் பற்றி அவர் அரிதாகவே பேசுவதாகவும் தெரிவித்தார். அந்த அனுபவம் மிகவும் பயமுறுத்துவதாகவும், முன்பு எந்த நிலையிலும் அனுபவிக்காத அளவுக்கு கலங்கச் செய்ததாகவும் அவர் கூறினார்.
தன் உடல் அசைவற்ற நிலையில் இருந்தபோதும், மருத்துவர்கள் தன்னை உயிர்ப்பிக்க முயற்சிப்பதை தாம் பார்க்க முடிந்ததாக ஹோம்ஸ் கூறினார். அதன் பின்னர், திடீரென சூழல் மாறத் தொடங்கியதாகவும், மிக இனிய வாசனை, தான் இதுவரை மணந்த மிக அழகான மலர்களின் மணம் உணர்ந்ததாகவும், அதன்பின் இசை கேட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
“நான் கண்களைத் திறந்தபோது, நான் எங்கு இருக்கிறேன் என்பதைக் கண்டிப்பாக அறிந்தேன். நான் சொர்க்கத்தில் இருந்தேன் என்பதை உணர்ந்தேன்,” என அவர் கூறினார். அந்த இடம் மிகவும் அமைதியானதாகவும், பயமோ அச்சமோ இல்லாததாகவும், அளவில்லாத நேர்மறை உணர்வுகள் நிறைந்ததாகவும் இருந்ததாக அவர் விளக்கினார்.
சொர்க்கத்தில் தாம் முன்னதாக இறந்த பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை பார்த்ததாகவும், அவர்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்ததாகவும் ஹோம்ஸ் தெரிவித்தார்.
அத்துடன், பல ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்ப காலத்தில் இழந்த தனது குழந்தையையும் தாம் பார்த்ததாக அவர் கூறினார். அங்கு ஒரு சிறு குழந்தையைப் பார்த்ததாகவும், அது தன் மகன் என்று கடவுள் சொன்னதாகக் கேட்டதாகவும் அவர் தெரிவித்தார். “நான் ஐந்து கால் மாத கர்ப்பத்தில் அந்த குழந்தையை இழந்தேன். அவர்கள் குழந்தையை தூக்கி காட்டி, ‘சார்லட், இது ஒரு ஆண் குழந்தை’ என்று சொன்னார்கள். அதன்பின் அவன் மறைந்துவிட்டான்,” என அவர் கூறினார்.
கணவரின் அனுபவமும் நம்பிக்கையும்
இந்த நேரத்தில் ஹோம்ஸ் பதிலளிக்காமல் இருந்தபோதும், மருத்துவமனை அறையில் மலர்கள் பற்றி பேசத் தொடங்கியதாக அவரது கணவர் டேனி ஹோம்ஸ் தெரிவித்தார். “அங்கு மலர்களே இல்லை என்பது எனக்கு தெரியும். அதனால் அவர் உடல் உலகத்தைத் தாண்டிய ஏதோ ஒன்றை அனுபவித்துக் கொண்டிருந்தார் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
அந்த அனுபவத்தின் இறுதியில், தனது தந்தையின் குரல் கேட்டதாகவும், “இது உன் நேரமல்ல; நீ மீண்டும் திரும்ப வேண்டும்” என்று அவர் கூறியதாகவும் ஹோம்ஸ் தெரிவித்தார். அதற்குப் பிறகு சில நிமிடங்களில் அவர் மருத்துவமனையில் மீண்டும் சுயநினைவை அடைந்தார்.
மருத்துவர்கள் பின்னர் அவரது உடல்நிலையை நிலைப்படுத்தினர். இந்த அனுபவம், வாழ்க்கையும் மரணமும் பற்றிய தனது பார்வையை முற்றிலும் மாற்றிவிட்டதாகவும், மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்மையிலேயே உள்ளது என்ற ஆழ்ந்த நம்பிக்கையை தன்னுள் ஏற்படுத்தியதாகவும், அது மிகுந்த ஆறுதலாக இருப்பதாகவும் சார்லட் ஹோம்ஸ் கூறினார்.



