தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையேயான கூட்டணி குறித்த புதிய தகவல்கள் கசிந்துள்ளன. இந்தக் கூட்டணி அமையுமா என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும், விஜய் தரப்பிலிருந்து விதிக்கப்பட்டுள்ள ஒரு முக்கிய நிபந்தனை ஓபிஎஸ் அணியை சிந்திக்க வைத்துள்ளது.
தற்போதைய அரசியல் சூழலில், ஓ.பன்னீர்செல்வம் பாஜகவுடன் மிக நெருக்கமான இணக்கத்தை கடைபிடித்து வருகிறார். ஆனால், தவெகவின் கொள்கை நிலைப்பாடுகளுக்கும் பாஜகவின் அரசியலுக்கும் முரண்பாடுகள் இருப்பதாகக் கருதப்படுவதால், ஓபிஎஸ்ஸை கூட்டணியில் சேர்ப்பது தனது கட்சிக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என விஜய் தயக்கம் காட்டி வருவதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், விஜய்யை சந்தித்து ஓபிஎஸ்ஸை தவெக கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததாக அரசியல் வட்டாரங்களில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.
இந்த ஆலோசனையின் முடிவில், விஜய் தரப்பில் இருந்து ஒரு கறாரான நிபந்தனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, “பாஜக உடனான உறவை ஓ.பன்னீர்செல்வம் முழுமையாக துண்டித்துக் கொண்டால் மட்டுமே, அவரை தவெக கூட்டணியில் சேர்ப்பது குறித்துப் பரிசீலிக்க முடியும்” என்பதே அந்த நிபந்தனை. பாஜகவின் ஆதரவு தளத்தைப் பெரிதும் நம்பியிருக்கும் ஓபிஎஸ், விஜய்யின் இந்த நிபந்தனையை ஏற்றுத் தேசியக் கட்சியுடனான உறவை முறித்துக் கொள்வாரா என்பது இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.
ஓபிஎஸ் எடுக்கும் முடிவைப் பொறுத்தே தவெகவின் அடுத்தகட்டக் கூட்டணி வியூகங்கள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்டகாலமாகப் பாஜகவின் நிழலில் இயங்கி வரும் ஓபிஎஸ், விஜய்யின் புதிய அரசியலை நோக்கி நகர்வாரா அல்லது தனது பழைய நிலைப்பாட்டிலேயே உறுதியாக இருப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Read More : இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..!! சமையல் எண்ணெய் விலை அதிரடியாக குறைகிறது..!!



