குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில், காதலுக்கு தடையாக இருந்த தந்தையை தனது காதலனுடன் சேர்ந்து 17 வயது சிறுமி ஒருவரே திட்டமிட்டுப் படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பத்ரா தாலுகாவைச் சேர்ந்த 30 வயதான நபர் ஒருவர், தனது வீட்டிலேயே கத்தியால் குத்திக் கொல்லப்பட்டு கிடந்தார். இது குறித்துப் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், அவரது 18 வயது கூட நிரம்பாத மகளே இந்த கொலையின் பின்னணியில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தனது காதலன் ரஞ்சித் மற்றும் அவனது நண்பன் மகேஷ் ஆகியோருடன் சேர்ந்து இந்தச் சிறுமி கொலைத் திட்டத்தைத் தீட்டியுள்ளார். சம்பவத்தன்று தந்தையின் உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து அவரை மயக்கமடையச் செய்த சிறுமி, நள்ளிரவில் காதலனை வீட்டிற்குள் வரவழைத்துள்ளார். காதலனும் அவனது நண்பனும் தந்தையைக் கத்தியால் குத்திக் கொலை செய்தபோது, அந்தச் சிறுமி ஜன்னலுக்குப் பின்னால் நின்று எவ்விதச் சலனமும் இன்றி அதைப் பார்த்துள்ளது அதிகாரிகளையே அதிரவைத்துள்ளது.
போலீசார் வெளியிட்ட தகவலின்படி, இது அந்தச் சிறுமியின் முதல் முயற்சியல்ல. இதற்கு முன்பே தனது தாய் மற்றும் தந்தை இருவரையும் விஷம் வைத்து அல்லது தூக்க மாத்திரை கொடுத்துக் கொல்ல அந்தச் சிறுமி இருமுறை முயன்றுள்ளார். குடிநீரில் மாத்திரைகளைக் கலந்து தாயிடம் கொடுத்தபோது, கசப்புச் சுவை காரணமாக அவர் அதைக் குடிக்காததால் உயிர் தப்பியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு உணவில் மாத்திரை கலந்த முயற்சியும் தோல்வியடையவே, மூன்றாவது முறையாகத் திட்டமிட்டுத் தந்தையைத் தூக்கத்திலேயே தீர்த்துக்கட்டியுள்ளனர்.
கொலையின் பின்னணி என்ன..?
குற்றம் சாட்டப்பட்ட காதலன் ரஞ்சித், ஏற்கனவே இந்தச் சிறுமியைக் கடத்திச் சென்ற வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. சிறையிலிருந்து வந்த பின்பும் அந்தச் சிறுமியுடன் ரஞ்சித் தனது தொடர்பைத் தொடர்ந்துள்ளான். இதற்குத் தந்தை கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, மனைவியையும் மகளையும் அறைக்குள் வைத்துப் பூட்டி வைத்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், தந்தையைக் கொன்றுவிட்டு ஊரை விட்டு ஓடிவிடலாம் எனச் சிறுமி தனது காதலனுடன் சேர்ந்து இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். தற்போது அந்தச் சிறுமி, காதலன் மற்றும் அவனது நண்பன் ஆகிய 3 பேரியும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Read More : செங்கோட்டையன் போட்ட மாஸ்டர் பிளான்..!! முடிவை மாற்றினார் ஓபிஎஸ்..!! தவெகவுடன் மெகா கூட்டணி..!!



