உலகின் மிகவும் குளிரான நகரம் எது என்று யோசித்தால், அதற்கான பதில் ரஷ்யாவின் சைபீரியாவில் அமைந்துள்ள யாகுட்ஸ்க். சுமார் 3.55 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த நகரம், தீவிர குளிரால் மனித சகிப்புத் தன்மையின் எல்லையையே சோதிக்கிறது. BBC Science Focus தகவலின்படி, ஜனவரி மாதத்தில் யாகுட்ஸ்கின் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை -42°C. மேலும், ஒரு நாளில் நான்கு மணி நேரத்திற்கும் குறைவாகவே சூரிய ஒளி கிடைக்கிறது.
இந்த நகரத்தில் இதுவரை பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை 1891 பிப்ரவரி 5-ம் தேதி -64.4°C ஆகும். சமீபத்தில் யாகுட்ஸ்கின் அன்றாட வாழ்க்கையை காட்டும் ஒரு வீடியோ சமூக வலைதளமான X-இல் வெளியாகி, 2.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் பெற்றுள்ளது. அதில், கொதிக்கும் நீர் கூட சில நொடிகளில் பனியாக மாறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
வெளியே வைக்கப்படும் உடைகள், மீன், இறைச்சி, கார்கள் என அனைத்தும் சில நொடிகளில் உறைந்து விடுகின்றன. “வெளிக்காற்றே ஒரு பெரிய ஃப்ரீசர் போல உள்ளது” என அந்த வீடியோவில் ஒருவர் கூறுகிறார். சந்தைகளில் மீன், இறைச்சி இயற்கையாகவே உறைந்து விற்கப்படுகின்றன. வெளியே வைக்கப்படும் வாழைப்பழம் கூட சுத்தியலாக மாறி, மரத்தில் ஆணி அடிக்க பயன்படுத்த முடியும் என்பதும் அந்த வீடியோவில் காட்டப்படுகிறது.
யாகுட்ஸ்கில் மக்கள் தங்கள் கார்களின் எஞ்சின்களை எப்போதும் இயங்கவைத்தே வைத்திருக்க வேண்டும். இல்லையெனில், சில நிமிடங்களில் எஞ்சின் முழுவதும் உறைந்து விடும். சராசரியாக 22 பவுண்ட் (சுமார் 10 கிலோ) எடையுள்ள, பல அடுக்குகளைக் கொண்ட உடைகளை அணிந்தே வெளியே செல்ல கூடிய நிலை அங்கு உள்ளது. புதிய காய்கறிகள் கிடைப்பது கடினம் என்பதால், இங்கு இறைச்சியே முக்கிய உணவாக உள்ளது. திறந்தவெளியில் சில நிமிடங்கள் பயன்படுத்தினாலே, ஸ்மார்ட்போன்கள் தானாகவே அணைந்து விடும்.
யாகுட்ஸ்க் வட துருவத்திற்கு அருகிலான நகரம் அல்ல. ஆனால், கடல்சார் தாக்கங்கள் இல்லாத பகுதியில் அமைந்துள்ளதால், கடும் குளிர் நிலவுகிறது. இது ஓகோட்ஸ்க் கடலில் இருந்து 725 கி.மீ தொலைவில் உள்ளது. குளிர்காலத்தில் சைபீரியாவில் நிலவும் “Siberian High” என்ற உயர் அழுத்த மண்டலம் காரணமாக, மிகக் குறைந்த சூரிய ஒளி கிடைக்கிறது. மேலும், யாகுட்ஸ்க் நிரந்தர உறைபனி (Permafrost) நிலத்தில் கட்டப்பட்ட நகரமாகும்.



