லக்னோவின் பரபரப்பான கிரீன் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரபல ஆசிரியர் சூரிய பிரதாப் சிங் (35), தனது லிவ்-இன் பார்ட்னர் மற்றும் அவரது இரு மகள்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தையே அதிரவைத்துள்ளது. ஆசிரியர் சூரிய பிரதாப், ரத்னா (46) என்ற விதவை பெண்ணுடன் ஏற்பட்ட உறவால் தனது உயிரைப் பறி கொடுத்துள்ளார். டியூஷன் படிக்க வந்த ரத்னாவின் மகள்களே, தங்களது தாயை திருமணம் செய்துகொள்ளுமாறு சூரிய பிரதாப்பை வற்புறுத்தியதாகவும், குடும்ப எதிர்ப்பையும் மீறி அவர் ரத்னாவுடன் இணைந்து வாழ தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் இனிமையாகத் தொடங்கிய இவர்களது உறவில், சொத்து ஆசை காரணமாக விரிசல் விழ தொடங்கியது. சூரிய பிரதாப்பை திருமணம் செய்துகொண்டால் மட்டுமே சட்டப்பூர்வமாகச் சொத்துக்களை அடைய முடியும் என்று ரத்னா கணக்குப் போட்டுள்ளார். ஆனால், சூரிய பிரதாப் திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரமடைந்த ரத்னா, தனது மகள்களை மூளைச்சலவை செய்து சூரியனுக்கு எதிராக திருப்பியுள்ளார்.
வீடெங்கும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி சூரிய பிரதாப்பை கண்காணித்ததுடன், அவர் மீது தவறான பிம்பத்தை கட்டமைக்க ரத்னா முயன்றதாக சொல்லப்படுகிறது. கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி இரவு, மகள்களின் ஒழுக்கம் குறித்து சூரிய பிரதாப் கண்டித்ததையே தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்ட ரத்னா, கொடூரமான ஒரு திட்டத்தை தீட்டினார்.
பிரதாப், உறங்கிக் கொண்டிருந்தபோது, ரத்னாவின் மகள்கள் இருவர் அவரது கை, கால்களைப் பிடித்துக்கொள்ள, ரத்னா கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். விடிய விடிய பிணத்துடன் அமர்ந்து திட்டமிட்ட மூவரும், காலையில் போலீஸாரிடம் சரணடைந்தனர். “தன்னுடைய மகளிடம் சூரியன் தவறாக நடக்க முயன்றதால் தற்காப்புக்காக கொலை செய்தோம்” என ரத்னா நாடகமாடியுள்ளார்.
எனினும், சூரிய பிரதாப்பின் தந்தை நரேந்திர சிங் அளித்த புகாரில், தனது மகனின் சொத்துக்களை அபகரிக்கவே திட்டமிட்டு இந்தக் கொலை அரங்கேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டின் கதவுகள் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததும், திட்டமிட்டே இந்தக் கொலை நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.



