திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ’வெல்லும் தமிழ் பெண்கள்’ திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டிற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. இந்த மாநாட்டில் திமுக மகளிரணி சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியலமைப்பு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது..
இந்த நிகழ்ச்சியில் திமுக மகளிரணி தலைவர் கனிமொழி உரையாற்றினார்.. அப்போது” பெண்களின் எதிர்காலத்திற்காக ஆட்சி செய்யக் கூடியவர் முதல்வர் ஸ்டாலின்.. தமிழ்நாட்டில் பெண்களை கேட்டால் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது என்று கூறுவார்கள்.. அதிகளவில் வேலைக்கு செல்லும் பெண்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.. இந்தியாவில் பெண்களின் உயர்கல்வி வளர்ச்சி விகிதம் 28%. ஆனால் தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவிகள் 48% பேர். இந்திய சராசாரியை விட தமிழ்நாட்டில் பெண்களின் உயர் கல்வி வளர்ச்சி விகிதம் அதிகம்.. இது வளர்ந்த நாடுகளுக்கு இணையான சதவீதம்..
எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகின்றனர்.. அதிமுக ஆட்சியில் தான் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்தது.. திமுக மகளிரணி போராட்டத்திற்கு பின் அந்த வழக்கு சிபிஐக்கு வழங்கப்பட்டது.. 2017-ல் உத்தரப்பிரதேசத்தில் உனாவோவில் 17 வயது சிறுமி பாஜக சட்டமன்ற உறுப்பினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.. பாஜக பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய லட்சணம் தான்.. கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் 30 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது..” என்று தெரிவித்தார்..



