நாம் தினமும் அருந்தும் தேநீர், காபி, இனிப்புகள், பிஸ்கட்டுகள் மற்றும் குளிர்பானங்களில் சர்க்கரை அதிகமாக உள்ளது. அதோடு, அரிசி, சப்பாத்தி போன்ற மாவுச்சத்து உணவுகளும் உடலில் செரிக்கப்பட்டு குளுக்கோஸாக மாறி இரத்தத்தில் கலக்கின்றன. இவை அனைத்தும் அளவோடு எடுத்தால் ஆற்றலை வழங்கினாலும், அதிகமாக எடுத்துக்கொண்டால் உடலுக்கு பல தீங்குகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிக சர்க்கரை உட்கொள்வது உடல் எடை அதிகரிப்புக்கு மட்டுமல்லாமல், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையையும் பாதிக்கிறது. இதனால் கெட்ட பாக்டீரியாக்கள் அதிகரித்து செரிமான மண்டலத்தில் அழற்சி, வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது நீண்ட காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைக்கிறது.
மனித உடலின் குடலில் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் உள்ளன. இவை உணவைச் செரிப்பதற்கும், வைட்டமின்கள் உருவாக்குவதற்கும் உதவுகின்றன. ஆனால் அதிக சர்க்கரை மற்றும் துரித உணவுகள் இந்த நுண்ணுயிர்களின் சமநிலையை குலைத்து, செரிமான கோளாறுகள் மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை உருவாக்குகின்றன.
மேலும் அதிக சர்க்கரை உட்கொள்வது இன்சுலின் செயல்பாட்டை பாதித்து, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தும். இது நீண்ட காலத்தில் நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. அதோடு, அதிக சர்க்கரை உட்கொள்வது உடலில் நீண்டகால அழற்சி, இரத்த அழுத்த உயர்வு மற்றும் கொழுப்பு அளவு அதிகரிப்புக்கும் காரணமாகிறது. இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்களின் அபாயத்தை உயர்த்துகிறது. கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
வாய்வழி ஆரோக்கியத்தையும் சர்க்கரை பாதிக்கிறது. இது பற்களில் உள்ள பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்தி, பற்சிதைவு மற்றும் ஈறு நோய்களுக்கு வழிவகுக்கிறது. இதனால் மருத்துவர்கள், சர்க்கரை உட்கொள்ளலை கட்டுப்படுத்தி, நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
Read more: எபோலோ வைரஸ் பரவலால் WHO அவசர நிலை அறிவிப்பு.. 80 உயிர்களை காவு வாங்கிய வைரஸ்க்கு தடுப்பூசி இல்லை..!



