நெல்லை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், எரிவாயு நிரப்பும் நிலையம் அருகே ஓடிக் கொண்டிருந்த ஆம்னி வேன் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலான சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது.
திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்த வாசனை திரவிய வியாபாரி ஷேக் செய்யது அலி, தனது வியாபார பணிகளுக்காக தச்சநல்லூர் நோக்கி ஆம்னி வேனில் சென்றுள்ளார். வழியில் மதுரை வடக்கு புறவழிச்சாலையில் உள்ள எரிவாயு நிலையத்திற்கு சென்று, தனது வாகனத்திற்கு கேஸ் நிரப்பியுள்ளார். கேஸ் நிரப்பி முடித்துவிட்டு அவர் வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முயன்றபோது, என்ஜின் பகுதியிலிருந்து திடீரென தீப்பொறி கிளம்பியுள்ளது. கேஸ் ஸ்டேஷனுக்கு மிக அருகிலேயே தீப்பொறி கிளம்பியதால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பிருப்பதை உணர்ந்த ஊழியர்கள், உடனடியாக செயல்பட்டு அந்த வாகனத்தை சாலையின் ஓரத்திற்குத் தள்ளிச் சென்றனர்.
வாகனம் சாலையோரம் கொண்டு செல்லப்பட்ட சில நிமிடங்களிலேயே, தீ மளமளவென பரவி கரும்புகை வெளியேற தொடங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக வாகனத்தில் இருந்த கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் தீயின் வேகம் கட்டுக்கடங்காமல் போக, சில நிமிடங்களிலேயே ஆம்னி வேன் முழுவதுமாக தீக்கிரையானது. வாகனத்திலிருந்து உரிமையாளர் உடனடியாக வெளியேறியதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதையடுத்து, தகவல் அறிந்து பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினர் விரைந்து வருவதற்கு முன்பே வாகனம் முழுவதுமாக எரிந்துவிட்ட போதிலும், தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து எஞ்சியிருந்த தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த விபத்து காரணமாக மதுரை – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



