சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் அசிங்கமான, அநாகரிகமான, பாலியல் உள்ளடக்கங்கள், சிறார்களை சிதைக்கும் பதிவுகள் மற்றும் சட்டவிரோத தகவல்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வகை உள்ளடக்கங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டப்படி வழக்கு தொடரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 டிசம்பர் 29 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆலோசனை மூலம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), சமூக ஊடக நிறுவனங்கள் உடனடியாக தங்களது சட்டப்படி செயல்படும் நடைமுறைகள் மீளாய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
IT Act – பிரிவு 79ன் படி, மூன்றாம் தரப்பு பயனர்கள் பதிவேற்றும் தகவல்களுக்கு பொறுப்பிலிருந்து விலக்கு பெற வேண்டுமெனில், தேவையான கவனத்தையும் சட்டப்படி நடவடிக்கைகளையும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு நினைவூட்டியுள்ளது.
அதாவது, சட்டவிரோத உள்ளடக்கம் தங்களது தளங்களில் பரவ அனுமதிக்காமல் தடுக்க வேண்டிய கடமை, ஒவ்வொரு intermediary தளத்திற்கும் உண்டு.
உத்தரவுக்கான காரணம்
பல சமூக ஊடக தளங்கள் அநாகரிக மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களை கட்டுப்படுத்துவதில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதனால் தகவல் தொழில்நுட்ப சட்டம், மற்றும் பிற குற்றச்சட்டங்கள் எனப் பல்வேறு சட்டங்களின் கீழ், தளங்கள், நிறுவனங்கள் மற்றும் பயனர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும் அபாயம் உள்ளது என அரசு எச்சரித்துள்ளது.
கடைபிடிக்க வேண்டிய சட்ட விதிகள்
சிறார்களுக்கு தீங்கு விளைவிக்கும், அசிங்கமான, பாலியல், சட்டவிரோத என எந்தவிதமான உள்ளடக்கத்தையும் பயனர்கள் பதிவேற்ற, பகிர, சேமிக்க அல்லது வெளியிட அனுமதிக்கக் கூடாது என்பதை தளங்கள் உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக, இவ்வகை உள்ளடக்கங்களை கண்டறிதல், புகார் பெறுதல், உடனடியாக நீக்குதல் ஆகிய பணிகளில் உறுதியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
காலக்கெடு கட்டாயம்
நீதிமன்ற உத்தரவு அல்லது அரசு அறிவிப்பு மூலம் கிடைத்தவுடன், சட்டவிரோத உள்ளடக்கங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் உடனடியாக நீக்க வேண்டும் அல்லது அணுகலை முடக்க வேண்டும். மேலும், ஒருவரின் பாலியல் படம், வீடியோ அல்லது போலி impersonation தொடர்பான புகார் வந்தால், 24 மணி நேரத்திற்குள் அந்த உள்ளடக்கம் நீக்கப்பட வேண்டும்.
அடுத்த கட்ட நடவடிக்கை
அனைத்து சமூக ஊடக மற்றும் டிஜிட்டல் தளங்களும் உடனடியாக மேற்கூறிய விதிகள் அனைத்தையும் மீளாய்வு செய்து, சட்டங்களுக்கு முழுமையாக இணங்க செயல்பட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இவை பின்பற்றப்படாவிட்டால், இடைத்தரகர் நிலை இழப்பதுடன், சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகளும் எதிர்நோக்க நேரிடும் என மத்திய அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.



