புத்தாண்டை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது. அதாவது அந்த செய்தியில் “மனைவியின் அனுமதி இல்லாமல் மது குடித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை” என்று கூறப்பட்டுள்ளது.. இந்த தகவல், பாரதீய ந்யாய சன்ஹிதா (BNS) 2023-இன் ஒரு பிரிவை அடிப்படையாகக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த புதிய குற்றச் சட்டம் 2024 ஜூலை 1 முதல் அமலில் உள்ளது.
சட்டத்தில் உண்மையில் என்ன உள்ளது?
வைரலாகும் இந்த தகவல் சரியான தகவல் அல்ல. முன்னர் இருந்த IPC பிரிவு 498A (கணவன் அல்லது உறவினர்கள் மனைவிக்கு கொடுமை செய்வது) இப்போது BNS பிரிவு 85 ஆக மாற்றப்பட்டுள்ளது. இந்த பிரிவின் படி, கணவன் மது அல்லது வேறு போதைப்பொருள் அருந்திய பிறகு மனைவிக்கு உடல் அல்லது மன உளைச்சல் கொடுத்தால், வீட்டில் அடிக்கடி கலவரம் செய்து அவளின் பாதுகாப்பு, மன அமைதி, மரியாதை ஆகியவற்றை பாதித்தால், அந்த மனைவி, கணவருக்கு எதிராக FIR பதிவு செய்ய சட்டபூர்வ உரிமை பெற்றுள்ளார்.
“மனைவியின் அனுமதி இல்லாமல் மது குடித்தாலே 3 ஆண்டுகள் சிறை” என்பது சட்டத்தில் நேரடியாக இல்லை. மது அருந்துவது தனிப்பட்ட குற்றமாக அல்ல. ஆனால், மது அருந்திய பிறகு மனைவியை கொடுமைப்படுத்துதல், மன உளைச்சல் ஏற்படுத்துதல், வீட்டில் அச்சுறுத்தல் உருவாக்குதல் போன்ற செயல்கள் நடந்தால் மட்டும் இந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும்.
தண்டனை
BNS பிரிவு 85ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சிறைத் தண்டனை (3 ஆண்டுகள் வரை) அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். சமூக வலைதளங்களில் பரவும் தகவல் போல “மனைவியின் அனுமதி இல்லாமல் குடித்தாலே சிறை” என்பது தவறான புரிதல். ஆனால், மது அருந்தி வீட்டில் கலவரம் செய்து மனைவிக்கு கொடுமை செய்தால், அது கடுமையான குற்றமாக கருதப்பட்டு, கணவர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே உண்மை.
முக்கியமாக, வெறும் மது குடித்ததற்காக மட்டும் சிறை கிடையாது. மது அருந்திய பிறகு கொடுமை, தொந்தரவு, வன்முறை அல்லது துன்புறுத்தல் நடந்திருக்க வேண்டும்.
உதாரணமாக, மனைவி “மது குடித்து வீட்டுக்கு வந்தால் சண்டை, வன்முறை நடக்கிறது” என்று தெளிவாக எச்சரித்த பிறகும், கணவர் அதையே தொடர்ந்தால், அது சட்டப்படி ‘கொடுமை’ என கருதப்படும்.
குடும்ப வன்முறை வழக்குகளில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவை மது காரணமாக உருவாகின்றன. அதனால் பெண்களை பாதுகாப்பதற்காக இந்த பிரிவு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ், மனைவி நீதிமன்றத்தில் பாதுகாப்பு உத்தரவு, பிரிவு உத்தரவு (separation order) அல்லது கணவரை “நல்ல நடத்தை பிணை” மீது விடுவிக்க வேண்டும் என்றும் கோரலாம்.
மனைவியின் அனுமதி இல்லாமல் மது குடித்தால் சிறை என்பது தவறான தகவலாகும்.. மது குடித்து கொடுமை செய்தால் மட்டுமே சட்டம் செயல்படும்.
Read More : வருமான வரி: இதை செய்வதற்கு இன்றே கடைசி வாய்ப்பு..! தாமதித்தால் நோட்டீஸ் வரும்..!



