பிஐஎஸ் தரச் சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நுகர்வோருக்கு மத்திய அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் இந்திய தர நிர்ணய அமைவனமான பிஐஎஸ்-ஆல் சான்றளிக்கப்பட்ட தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்துமாறு மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறையும் தர நிர்ணய அமைவனமும் வேண்டுகோள் விடுத்துள்ளன. பிஐஎஸ்-சின் தரச் சான்றிதழ் இல்லாமல் தலைக் கவசங்களைத் தயாரிப்பது அல்லது விற்பனை செய்வதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சாலைகளில் 21 கோடிக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளதால், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. மோட்டார் வாகனச் சட்டம்-1988-ன் கீழ் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும். அந்த தலைக் கவசங்களுக்கு, செயல்திறன் தர மதிப்பீடும் உள்ளது. தரமற்ற தலைக்கவசங்கள் பாதுகாப்பு அம்சங்களை விட்டுக் கொடுத்து விடுவதால் சாலைப் பாதுகாப்பு என்ற நோக்கத்தை சிதைப்பதாக அவை இருக்கின்றன. இதை நிவர்த்தி செய்வதற்காக, 2021-ம் ஆண்டு முதல் தரக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலில் உள்ளது. இது அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகளும் பிஐஎஸ் தரநிலைகளின் கீழ் (ஐஎஸ் 4151:2015) சான்றளிக்கப்பட்ட, ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட தலைக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஜூன் 2025 நிலவரப்படி, இந்தியா முழுவதும் 176 உற்பத்தியாளர்கள் தலைக்கவசங்களுக்கான பிஐஎஸ் உரிமங்களை வைத்திருக்கின்றனர். சாலையோரங்களில் விற்கப்படும் பல தலைக்கவசங்களுக்கு பிஐஎஸ் சான்றிதழ் இல்லை. இவை தரமற்றதாக இருக்க கூடும் என்பதால் நுகர்வோருக்கு சாலை விபத்துகள் ஏற்பட்டால் நுகர்வோருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாமல் போகும். எனவே, இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
தரநிலைகளைச் செயல்படுத்த, பிஐஎஸ் வழக்கமான தொழிற்சாலை மற்றும் சந்தை கண்காணிப்பை மேற்கொள்கிறது. இதன் மூலம் தரமற்ற தலைக் கவசங்கள் உற்பத்தி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தரமற்ற தலைக்கவசங்களை சந்தையில் இருந்து அகற்றுவதன் மூலம், சாலை விபத்தால் ஏற்படும் இறப்புகளைத் தடுப்பதையும், உயர்தர பாதுகாப்பு உபகரணங்களை ஊக்குவிப்பதையும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.