தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது உட்கட்சி கட்டமைப்பில் அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பு, கட்சி வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில், விசிக-வில் செயல்பட்டு வரும் 144 மாவட்ட செயலாளர்களில் 48 பேரை அதிரடியாக பதவியில் இருந்து நீக்கி திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார். மேலும், 9 மாவட்ட செயலாளர்கள் மண்டல பொறுப்பாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மீதமுள்ள 96 மாவட்ட செயலாளர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைய உள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக கட்சியை அடிமட்ட அளவில் பலப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஒரே நேரத்தில் இத்தனை மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.



