அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில், சூனியம் வைத்ததாக எழுந்த குருட்டுத்தனமான சந்தேகத்தின் அடிப்படையில், தம்பதியினர் இருவர் கிராம மக்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
உள்ளூர் தகவல்களின்படி, அந்தத் தம்பதியினரை அவர்களின் வீட்டிற்குள்ளேயே சிறைபிடித்த ஒரு கும்பல், முதலில் கூர்மையான ஆயுதங்களால் அவர்களை கொடூரமாகத் தாக்கியுள்ளது. பின்னர், தப்பிவிடக் கூடாது என்பதற்காக வீட்டை வெளிப்பக்கமாக பூட்டித் தீ வைத்துள்ளனர். இதில் தம்பதியினர் இருவரும் தப்பிக்க வழியின்றி தீக்கிரையாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், எரிந்த நிலையில் இருந்த உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இக்கொடூர சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.



