பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”2026 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றியை பதிவு செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தங்களது கூட்டணியை ‘அடிமை கூட்டணி’ என தொடர்ந்து விமர்சித்து வருவது குறித்துப் பேசிய அவர், அரசியல் ரீதியாக திமுகவை முறியடிக்கும் ஒரு பெரும் சக்தியாக இந்த கூட்டணி உருவெடுக்கும்; காலம் அதற்கான பதிலை சொல்லும்” தமிழிசை பதிலடி கொடுத்தார்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யுடன் பாஜக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, அரசியலில் நீண்டகால அனுபவம் வாய்ந்தவர்களுடன், கணிப்புகளின் அடிப்படையில் அரசியலில் அடியெடுத்து வைப்பவர்கள் இணைந்தால் அது நல்ல மாற்றத்திற்கு வழிவகுக்கும்; ஒருவேளை அப்படி அமையாவிட்டாலும் பாஜகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. பாஜகவோடு விஜய் இணைந்தால் அவருக்கு நல்லது. கூட்டணிக்கு வரவில்லை என்றால் அவருக்குத் தான் பிரச்சனை” என எச்சரித்துள்ளார்.
மேலும், 21 மாநிலங்களில் ஆட்சி நடத்தும் அனுபவம் கொண்ட ஒரு தேசியக் கட்சியான பாஜகவை, வெறும் அனுமானங்களின் அடிப்படையில் இயங்கும் கட்சிகளுடன் ஒப்பிட முடியாது. எனவே, 2026-ஆம் ஆண்டில் தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத மற்றும் மிகப்பெரிய மாற்றம் நிகழப்போவது உறுதி என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.



