இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அன்றாட தேவைகளான காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை சில்லறையாகப் பணம் கொடுத்து வாங்குவதில் சிக்கல் இல்லை என்றாலும், அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகளை ரொக்கமாக மேற்கொள்வது உங்களை வருமான வரித் துறையின் (IT Department) பிடியில் சிக்க வைத்துவிடும். ரிசர்வ் வங்கி மற்றும் வருமான வரித் துறை ஆகியவை பெரிய அளவிலான பணப் பரிமாற்றங்களுக்கு கடுமையான சட்டதிட்டங்களை வகுத்துள்ளன.
குறிப்பாக, வீடு அல்லது நிலம் போன்ற சொத்துகளை வாங்கும் போது ரொக்கமாகப் பணம் கொடுப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ரூ.30 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள அசையா சொத்து பரிமாற்றங்கள் நடந்தால், அது குறித்துப் பதிவாளர் அலுவலகம் உடனடியாக வருமான வரித் துறைக்குத் தகவல் தெரிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம், கார் அல்லது மின்னணு சாதனங்கள் போன்ற ஆடம்பரப் பொருட்களை வாங்கும் நுகர்வோர், ஒரே நாளில் ஒரு நபரிடம் ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாகப் பணம் செலுத்த சட்டப்படி இடமில்லை. சட்டப்பிரிவு 269ST-ன் கீழ், ஒரே நிகழ்விற்காக பில்களை தனித்தனியாகப் பிரித்துக் காட்டினாலும் இந்த வரம்பு பொருந்தும். விதியை மீறி ரொக்கமாகப் பணம் பெற்றால், அந்த முழுத் தொகைக்கும் சமமான அபராதம் விதிக்கப்படும். எனவே, இதுபோன்ற உயர் மதிப்புப் பரிமாற்றங்களுக்கு வங்கிப் பரிமாற்றம், காசோலை அல்லது யுபிஐ (UPI) முறைகளை பயன்படுத்துவதே பாதுகாப்பானது.
தனிநபர்களுக்கு இடையிலான கடன் பரிவர்த்தனைகளிலும் வருமான வரித் துறை மிகக் கடுமையான விதிகளைப் பின்பற்றுகிறது. சட்டப்பிரிவு 269SS-ன்படி, ரூ.20,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையைக் கடனாகப் பெறவோ அல்லது திரும்பச் செலுத்தவோ ரொக்கத்தைப் பயன்படுத்தக் கூடாது. இந்த வரம்பைத் தாண்டும் அனைத்துக் கடன் விவகாரங்களும் வங்கி மூலமாகவே நடைபெற வேண்டும்.
அதேபோல், வங்கிக் கணக்குகளில் திடீரென பெரிய தொகையை வைப்பு (Deposit) செய்வதையும் வருமான வரித் துறை கண்காணித்து வருகிறது. சேமிப்புக் கணக்கில் ரூ.10 லட்சத்திற்கு மேலோ அல்லது நடப்புக் கணக்கில் ரூ.50 லட்சத்திற்கு மேலோ ரொக்கம் டெபாசிட் செய்யப்பட்டால், வங்கிகள் அந்தத் தகவலை வருமான வரித் துறைக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கும்.
உங்களது பான் (PAN) எண் மூலம் வங்கிகள், பங்குச் சந்தைத் தரகர்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வழங்கும் ‘நிதிப் பரிவர்த்தனை அறிக்கைகள்’ (SFT) மூலம் டிஜிட்டல் முறையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தேவையற்ற அபராதங்கள் மற்றும் சட்ட சிக்கல்களைத் தவிர்க்க, அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறையில் மேற்கொள்வதும், ஈட்டும் வருமானத்திற்குச் சரியான வரி செலுத்துவதும் அவசியமாகும்.



