நாம் அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்காக தினசரி உடற்பயிற்சி அவசியமாகிறது. அதில் முக்கியமானதும் எளிதில் செய்யக்கூடியதுமான ஒன்று ஓட்டப் பயிற்சி (Running) ஆகும். ஓட்டப் பயிற்சி முழு உடலையும் இயக்கத்தில் வைத்திருக்கும் ஒரு ஏரோபிக் உடற்பயிற்சி ஆகும். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஓட்டம் மூலம் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் சீராக கிடைத்து, இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாடுகள் வலுப்பெறுகின்றன.
பல ஆய்வுகளில், ஓட்டப் பயிற்சி செய்யும் நபர்களுக்கு இதய நோய் அபாயம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக நீண்டகாலமாக ஓடும் பழக்கமுள்ளவர்கள், இதய ஆரோக்கியத்தில் சிறந்த முன்னேற்றம் காண்கிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், ஓட்டப் பயிற்சி தசை வலிமையை அதிகரிக்கவும், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அதிகமாக ஓடினால் எலும்புகள் பாதிக்கப்படும் என்ற தவறான கருத்து இருந்தாலும், மிதமான அளவில் செய்யப்படும் ஓட்டம் எலும்புகளை வலுப்படுத்துகிறது.
ஓட்டப் பயிற்சியின் மற்றொரு முக்கிய நன்மை மனநல மேம்பாடு. வெளியில் இயற்கையுடன் இணைந்து ஓடுவது மன அழுத்தத்தை குறைத்து மன அமைதியை வழங்குகிறது. இது தியானம் மற்றும் யோகாவிற்கு இணையான மனநல நன்மைகளை தருகிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதோடு, ஓட்டப் பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நீரிழிவு, உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் ஓடுவது உடல் எடையை குறைக்கவும், உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவும். ஆனால், இதய பிரச்சனை அல்லது பிற உடல் பாதிப்புகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே ஓட்டப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். சுவாச பிரச்சனை அல்லது மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனே பயிற்சியை நிறுத்தி மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
Read more: ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்? நிபுணர்களின் பதில் இதுதான்..!



