வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, போதைப்பொருள் புழக்கம், அரசு ஊழியர்கள் போராட்டம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சிப் பூசல் ஆகியவற்றை மையப்படுத்தி திமுக அரசையும் அதன் கூட்டணி கட்சிகளையும் அவர் கடுமையாக சாடினார்.
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுவது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது என்றும் நான்கரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர், தனது தோல்விகளை மறைக்க மத்திய அரசின் மீது பழி போடுவதாகவும் குற்றம்சாட்டினார்.
2026 சட்டமன்றத் தேர்தல் களம் குறித்துப் பேசிய அவர், இன்னும் 90 நாட்களில் தமிழகத்தின் அரசியல் வரைபடம் தெளிவாகிவிடும் என்றும், திமுக தலைமையிலான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகிவிட்டதாகவும் குறிப்பிட்டார். நடிகர் விஜய்யின் மாநாடுகளில் கூடும் கூட்டத்தை பற்றி பேசுகையில், “தலைவர்கள் கூட்டம் நடத்துவது இயல்பு; ஆனால், மக்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தின் முன் நின்று சிந்தித்துச் செயல்படுவார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீது மக்கள் ஏற்கனவே நம்பிக்கை வைத்துவிட்டனர்” என்று பதிலளித்தார்.
மேலும், தமிழக காங்கிரஸ் கட்சி குறித்து ஜோதிமணி எம்.பி எழுப்பிய புகார்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அண்ணாமலை, காங்கிரஸ் கட்சி அழிந்து வருகிறது. தமிழக காங்கிரஸில் ஒரு தரப்பு டெல்லிக்கும், மற்றொரு தரப்பு முதல்வர் ஸ்டாலினுக்கும் ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கிறது. தமிழக மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யாத காங்கிரஸ் கட்சி, 2026 தேர்தலில் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்படும்” என்று கடுமையாக விமர்சித்தார்.



