தமிழ் திரையுலகில் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றித் திரைப்படங்களை வழங்குவதில் கைதேர்ந்தவர் இயக்குனர் விக்ரமன். ‘சூரியவம்சம்’, ‘வானத்தைப்போல’, ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ என இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் ரசிகர்களை கட்டிப்போடும் பல காவியங்களை இவர் படைத்துள்ளார்.
அந்த வரிசையில், 2002-ம் ஆண்டு சூர்யா, சினேகா, லைலா நடிப்பில் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனைப் படைத்த திரைப்படம் ‘உன்னை நினைத்து’. ஆனால், இந்தப் படம் உருவான ஆரம்பக்கட்டத்தில் நடந்த ஒரு சுவாரசியமான உண்மை தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இயக்குனர் விக்ரமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு நெகிழ்ச்சியான பதிவு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் அரசியலில் தடம் பதித்து, சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்திருப்பது தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக விக்ரமன் குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில், விஜய்யுடன் பணியாற்றிய பழைய நினைவுகளை அவர் நினைவுகூர்ந்துள்ளார். உண்மையில் ‘உன்னை நினைத்து’ படத்தில் சூர்யாவுக்கு முன்பாக விஜய்யே கதாநாயகனாக ஒப்பந்தமாகி, படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.
அந்தப் படத்தின் தொடக்கத்தில் விஜய்யை வைத்து இரண்டு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதாக விக்ரமன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மூணாறின் எழில் கொஞ்சும் மலைப்பகுதிகளில் ‘என்னை தாலாட்டும் சங்கீதம்’ என்ற பாடல் விஜய்யை வைத்து படமாக்கப்பட்டது. அந்தப் பாடல் காட்சியின் வீடியோவை தற்போது அவர் வெளியிட, அது விஜய் ரசிகர்களால் இணையத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
விஜய்யின் இளமைக்கால துள்ளலும், விக்ரமனின் அந்த மென்மையான திரைமொழியும் இணைந்துள்ள அந்த வீடியோ பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. சிற்பியின் இசையில் உருவான இந்தப் படத்தில் சில காரணங்களால் விஜய் விலக நேரிட, அதன் பின்னரே சூர்யா அந்த வாய்ப்பைப் பெற்றார். சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்திய இந்தப் படத்தின் தொடக்கப் புள்ளியில் விஜய் இருந்தார் என்பது பலருக்கும் புதிய தகவலாக அமைந்துள்ளது.
“பழைய நினைவுகள் பசுமையானவை” என்று விக்ரமன் பகிர்ந்துள்ள இந்த வீடியோ, விஜய்யின் திரைப்பயணத்தை மிஸ் செய்யும் ரசிகர்களுக்கு ஒரு சிறிய ஆறுதலாகவும், அதே சமயம் ஒரு சுவாரசியமான சினிமா தகவலாகவும் அமைந்துள்ளது.
Read More : அதிசய உணவாகும் பழைய சோறு..!! 200 நோய்களுக்கு ஒரே தீர்வு..!! சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் அதிரடி ஆய்வு..!!



