செங்கடலில் ஹூதி அமைப்புக்கும், அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு இடையே மோதல் நடந்துவரும் நிலையில் ஏமனில் செயல்படும் ஹூதி அமைப்பை சர்வதேச பயங்கரவாதக் குழுவாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
செங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர் கப்பலான USS Carney கடந்த 13ம் தேதி ஏமனின் ரேடார் கட்டமைப்பை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டது. அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட கூட்டு இராணுவத்தினர் தற்போது ஹூதி கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து 30-க்கும் அதிக தாக்குதல்களை மேற்கொண்டதாக வௌ்ளை மாளிகை குற்றம்சாட்டியது. ஏமன் தற்போது பெயரளவில் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டாலும் நாடு ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
அமெரிக்க மற்றும் பிரித்தானிய கூட்டு இராணுவம் ஏமனின் தலைநகர் சனா உள்ளிட்ட ஹூதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது டிரோன், ஏவுகணை தாக்குதல் மேற்கொண்ட நிலையில், செங்கடலுக்கு அருகே புதிய பதற்றம் உருவாகி வருகிறது. செங்கடலில் தாக்குதலை நிறுத்தாவிட்டால் தொடர்ந்து தாக்குவோம் என்று ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் செங்கடலில் உள்ள அமெரிக்க போர்க் கப்பலான யுஎஸ்எஸ் லாபூனை நோக்கி ஹூதிப் போராளிகள் ஏவுகணைத் தாக்குதலை கடந்த 15ம் தேதி நடத்தியுள்ளனர். இதையறிந்த அமெரிக்கா போர் விமானம் ஒன்று அந்த ஏவுகணையை சுட்டுவீழ்த்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை (சென்ட்காம்) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. ஹொடெய்டா கடற்கரைக்கு அருகில் அமெரிக்க போர் விமானம் மூலம் இந்த ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டது என்று சென்ட்காம் தெரிவித்துள்ளது. ஹூதிகளின் தாக்குதல்களில் எந்தவொரு இழப்பும் ஏற்படவில்லை என்றும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் சென்ட்காம் கூறியுள்ளது.
இந்த நடவடிக்கைகள் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே காசாவில் நடந்து வரும் மோதலின் நீட்சியாகவே பார்க்கப்படுகிறது, இந்தநிலையில், ஹூதி அமைப்பை பயங்கரவாதக் குழுவாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 3 ஆண்டுக்குமுன் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து ஹூதி அமைப்பு நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் பயங்கரவாதக் குழுவாக அமெரிக்கா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.