இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..! முழு விவரம் இதோ..!

modi vande bharat 2

பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்திய ரயில்வேயில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.. ஹவுரா மற்றும் கவுஹாத்தி (காமாக்யா) இடையே இயக்கப்படும் படுக்கை வசதி ரயிலை கொடியசைத்து தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி மால்டா நகர ரயில் நிலையத்திற்கு வருகை புரிந்தார். கவுஹாத்தி (காமாக்யா)–ஹவுரா வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலையும் பிரதமர் காணொளி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


பிரதமர் மோடி மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றுள்ளார். அங்கு அவர் பல ரயில் மற்றும் சாலைத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அந்த வகையில் மால்டாவில், ஒரு பொது நிகழ்ச்சியில் ரூ. 3,250 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

விமானப் பயணம் போன்ற அனுபவத்தை வழங்கும் வந்தே பாரத் படுக்கை வசதி ரயில்
நவீன இந்தியாவின் வளர்ந்து வரும் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக குளிரூட்டப்பட்ட படுக்கை வசதி கொண்ட ரயில் ஆகும். இது பயணிகளுக்கு சிக்கனமான கட்டணத்தில் விமானப் பயணம் போன்ற அனுபவத்தை வழங்கும் என்று பத்திரிகை தகவல் பணியகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் நீண்ட தூரப் பயணங்களை வேகமானதாகவும், பாதுகாப்பானதாகவும், மேலும் வசதியானதாகவும் மாற்ற அமைக்கப்பட்டுள்ளது. இது ஹவுரா–குவஹாத்தி (காமாக்யா) வழித்தடத்தில் பயண நேரத்தை சுமார் 2.5 மணி நேரம் கணிசமாகக் குறைக்கும்.

மேற்கு வங்கத்தில் 4 ரயில்வே திட்டங்களுக்கு மோடி அடிக்கல்

தேர்தலை எதிர்கொள்ளும் மேற்கு வங்கத்தில், 4 முக்கிய ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வைக்க உள்ளார்.. இதில் பலூர்காட் மற்றும் ஹிலி இடையே ஒரு புதிய ரயில் பாதை, நியூ ஜல்பைகுரியில் அடுத்த தலைமுறை சரக்கு பராமரிப்பு வசதிகள், சிலிகுரி லோகோ ஷெட்டை மேம்படுத்துதல் மற்றும் ஜல்பைகுரி மாவட்டத்தில் வந்தே பாரத் ரயில் பராமரிப்பு வசதிகளை நவீனமயமாக்குதல் ஆகியவை அடங்கும்.

நியூ கூச்பெஹார்–பாமன்ஹாட் மற்றும் நியூ கூச்பெஹார்–பாக்சிர்காட் இடையே உள்ள ரயில் பாதைகளின் மின்மயமாக்கலையும் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இது வேகமான, தூய்மையான மற்றும் அதிக ஆற்றல் திறன் கொண்ட ரயில் இயக்கங்களுக்கு வழிவகுக்கும்.

மேலும், அவர் 4 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.. அவை, நியூ ஜல்பைகுரி- நாகர்கோவில் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்; நியூ ஜல்பைகுரி- திருச்சிராப்பள்ளி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்; அலிபுர்துவார் – எஸ்எம்விடி பெங்களூரு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்; அலிபுர்துவார் – மும்பை (பன்வேல்) அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ். பிரதமர் ஜனவரி 18 அன்று பிற்பகல் 3 மணியளவில் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சிங்கூரில் சுமார் 830 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, அவற்றை தொடங்கி வைக்கிறார்.

மோடி இன்று அசாம் மாநிலத்திற்கும் செல்ல உள்ளார். அங்கு அவர் போடோ சமூகத்தின் செழுமையான பாரம்பரியத்தைக் கொண்டாடும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கலாச்சார நிகழ்வான “பகுரு1ம்பா தௌ 2026” நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்வில் 10,000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்த முறையில் பகரு1ம்பா நடனத்தை நிகழ்த்த உள்ளனர்.

மேலும், மோடி காசிரங்கா மேம்பாலத் திட்டத்திற்காக பூமி பூஜை செய்ய உள்ளார். காளியாபோரில் 6,950 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 86 கிலோமீட்டர் நீளமுள்ள காசிரங்கா மேம்பாலத் திட்டம், உள்கட்டமைப்பு மேம்பாட்டையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டமாகும்.

இதில் காசிரங்கா தேசியப் பூங்கா வழியாகச் செல்லும் 35 கிலோமீட்டர் நீளமுள்ள மேம்பால வனவிலங்கு வழித்தடம், 21 கிலோமீட்டர் நீளமுள்ள புறவழிச் சாலைப் பகுதி மற்றும் NH-715 நெடுஞ்சாலையின் 30 கிலோமீட்டர் நீளப் பகுதியை இருவழிப் பாதையிலிருந்து நான்கு வழிப் பாதையாக விரிவுபடுத்துதல் ஆகியவை அடங்கும். இந்தத் திட்டம் பூங்காவின் செழுமையான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பல்லுயிர்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

Read More : மொபைல் பயனர்கள் கவனத்திற்கு..! அரசு உங்கள் போனை கட்டுப்படுத்துகிறதா? நிறுவனங்கள் விளக்கம்..!

RUPA

Next Post

மஞ்சுவிரட்டு.. மாடு முட்டியதில் இருவர் பலி.. சேலத்தில் சோகம்..!

Sat Jan 17 , 2026
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலாமாக நடைபெற்று வருகின்றன.. அதே போல் தமிழ்நாட்டில் பல இடங்களில் மஞ்சுவிரட்டு போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.. ஜல்லிக்கட்டின் மற்றொரு வடிவமான மஞ்சு விரட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், வேகமாக ஓடும் முரட்டு காளைகளின் கொம்புகளை பிடித்து அடக்க முயற்சிப்பார்கள்.. மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும். மாடுபிடி வீரர்கள் காளையின் திமில் அல்லது கொம்புகளைப் பிடித்து குறிப்பிட்ட […]
manjuvirattu

You May Like