நாமக்கல் மண்டலத்தின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் முட்டை உற்பத்தி துறையில், கடந்த சில வாரங்களாக நிலவி வந்த விலையேற்றம் தற்போது தலைகீழாக மாறியுள்ளது. கடந்த மாதத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத உச்சமாக 6 ரூபாய் 40 காசுகள் வரை சென்றது. ஆனால், கடந்த 15 நாட்களில் இந்த விலை படிப்படியாக சரிந்து 5 ரூபாய் 60 காசுகள் என்ற நிலையை எட்டியது.
இந்நிலையில், தற்போது மேலும் 30 காசுகள் சரிந்து, ஒரு முட்டையின் விலை 5 ரூபாய் 30 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) அறிவித்துள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக, அங்கிருந்து வரும் முட்டைக்கான தேவை பெருமளவில் குறைந்துள்ளது. இது நாமக்கல் முட்டைச் சந்தையில் தேக்க நிலையை உருவாக்கியுள்ளது.
இதுமட்டுமின்றி, தற்போது பண்ணைகளில் முட்டை உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளதும், வடமாநிலங்களுக்கு செல்லும் முட்டை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சரிவும் விலையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. முட்டை விலையை போலவே கோழி இறைச்சிச் சந்தையிலும் விலையில் மாற்றங்கள் தென்படுகின்றன. தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தரவுகளின்படி, பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ 149 ரூபாயாகவும், முட்டைக்கோழி ஒரு கிலோ 82 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



