தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகள் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ளன. குறிப்பாக, அதிமுக மற்றும் தேமுதிக இடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தற்போது ஒரு இழுபறி நிலை நீடித்து வரும் சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு 2 நாள் கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ஜனவரி 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளதால், அதற்கு முன்னதாகவே தேசிய ஜனநாயக கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என பாஜக தரப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, இழுபறியில் இருக்கும் தேமுதிக உடனான பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க அதிமுக தலைமை தீவிரம் காட்டி வருகிறது.
கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தேமுதிக தரப்பில் 21 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்பி பதவி கோரப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு தொகுதியிலும் திமுகவுக்கு இணையாக தேர்தல் செலவுகளை செய்ய அதிமுக உதவ வேண்டும் என்ற நிபந்தனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிமுக தரப்போ 10 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதோடு, தற்போதைக்கு ராஜ்யசபா சீட் வழங்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்த முரண்பாடுகளால் பேச்சுவார்த்தை தொய்வடைந்துள்ளது.
இந்நிலையில், அதிமுகவுடன் பேசிக்கொண்டே பிரேமலதா தரப்பு திமுகவிடமும் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது எடப்பாடி பழனிசாமியை கடும் எரிச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. திமுக தரப்பில் வெறும் 7 தொகுதிகள் மட்டுமே தருவதாக கூறப்பட்ட நிலையில், தேமுதிக இரண்டு பக்கமும் பேரம் பேசுவது தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது. “இன்னும் இரண்டு நாட்களில் உங்கள் முடிவைச் சொல்லுங்கள், இல்லையெனில் மாற்று ஏற்பாடுகளைக் கவனிப்போம்” என இபிஎஸ் தரப்பு கறாராக தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
Read More : “அன்புமணி தலைவரே கிடையாது”..!! “இனி அப்படி அழைக்காதீங்க”..!! மருத்துவர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி..!!



