“ரத்தமா வருதுப்பா.. என்னை விட்ராதப்பா”..!! உடல் எடையை குறைக்க Youtube வீடியோ பார்த்த கல்லூரி மாணவி துடிதுடித்து மரணம்..!!

Madurai 2026

மதுரையில் யூடியூப் வீடியோவில் பகிரப்பட்ட தவறான மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றி, ‘வெங்காரம்’ என்ற நாட்டு மருந்துப் பொருளை உட்கொண்ட கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற முனைப்பில் அந்த மாணவி எடுத்த விபரீத முடிவு, ஒரு குடும்பத்தின் கனவையே சிதைத்துள்ளது. சமூக வலைதளங்களில் உலவும் சரிபார்க்கப்படாத மருத்துவத் தகவல்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.


மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி வேல்முருகனின் மகள் கலையரசி (19), அப்பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். தனது உடல் பருமன் குறித்து மன உளைச்சலில் இருந்த அவர், உடல் எடையை வேகமாக குறைக்க வழிதேடியுள்ளார். அப்போது ‘இணைவோம் இயற்கையுடன்’ என்ற யூடியூப் பக்கத்தில், ‘வெங்காரம்’ என்ற பொருளை சாப்பிட்டால் உடல் எடை குறையும் எனப் பதிவிடப்பட்டிருந்த வீடியோவை அவர் பார்த்துள்ளார். இதனை நம்பிய மாணவி, கடந்த 16-ஆம் தேதி நாட்டு மருந்து கடையில் அந்தப் பொருளை வாங்கி வந்து, சனிக்கிழமை காலை உட்கொண்டுள்ளார்.

மருந்தை சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே கலையரசிக்குத் தீவிர வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. முதலில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காத நிலையில், இரவு அவரது நிலைமை மோசமடைந்தது. “வயிறு வலிக்குதுப்பா, ரத்தமா வருதுப்பா.. என்னை விட்ராதப்பா!” என்று தனது தந்தையை கட்டிப்பிடித்து அவர் கதறியுள்ளார். நள்ளிரவில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்தச் சோகம் குறித்துப் பேசிய மாணவியின் தந்தை வேல்முருகன், “யாரும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சமூக வலைதளங்களைப் பார்த்து மருந்துகளை எடுக்க வேண்டாம். என் மகளுக்கு நேர்ந்த கதி வேறு யாருக்கும் வரக்கூடாது” என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார். இந்த சம்பவம் தொடர்பாகச் செல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முறையான அங்கீகாரம் இல்லாத யூடியூப் மருத்துவ சேனல்கள் மீதும், இதுபோன்ற அபாயகரமான தகவல்களை பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கல்லூரி மாணவர்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More : மாதம் ரூ.2,000 உதவித்தொகை..!! தமிழ்நாடு அரசின் அன்புகரங்கள் திட்டம்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் இங்கே..!!

CHELLA

Next Post

ஆன்லைன் மருத்துவ வீடியோக்களில் மறைந்துள்ள ஆபத்துகள்..!! போலியானதை எப்படி கண்டறிவது..?

Tue Jan 20 , 2026
இன்றைய காலகட்டத்தில் கூகுள் தேடலையும், யூடியூப் வீடியோக்களையும் ‘டிஜிட்டல் மருத்துவராக’ பார்க்கும் போக்கு அதிகரித்துள்ளது. இந்த சமயத்தில் போலி மருத்துவத் தகவல்களைக் கண்டறிய சில எளிய வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். முதலாவதாக, ஒரு வீடியோவில் சொல்லப்படும் தகவல் ‘மிகவும் எளிதானது அல்லது மிக விரைவானது’ (உதாரணமாக: 2 நாட்களில் 10 கிலோ எடை குறையும்) என கூறப்பட்டால், அது 99% போலியான தகவலாக இருக்கவே வாய்ப்பு அதிகம். எடை […]
Madurai Student 2026

You May Like