தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெருமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, இந்த 4 மாவட்டங்களுமே கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறை நாட்களை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அப்போது அறிவித்திருந்தார்.
இதையடுத்து, அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த 2ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட அறிவிப்பின்படி சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. ஏற்கனவே, 10, 12ஆம் வகுப்புகளுக்கு மார்ச் மாதம் பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், அந்த வகுப்புகளில் படிக்கின்ற மாணவர்கள் விரும்பினால் அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜனவரி மாதம் பொங்கல், குடியரசு தினம் உள்ளிட்ட அரசு விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருவதை அடுத்து, மீதமுள்ள வார நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, ஜனவரி மாதத்தில் 6ஆம் தேதி, 20ஆம் தேதியும், பிப்ரவரி மாதத்தில் 3, 17ஆம் தேதிகளிலும் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியே, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று சனிக்கிழமை செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை மீண்டும் ஒருமுறை அறிவித்துள்ளது.