பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார்.. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.. இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மோடி அதில் உரையாற்ற உள்ளார்.
கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 2:15 மணிக்கு ஒரு சிறப்பு விமானத்தில் புறப்பட்டு சென்னை பழைய விமான நிலையத்தில் பிரதமர் மோடி தரையிறங்குவார். பின்னர், அவர் பிற்பகல் 2:50 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகத்தில் பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்ட ஹெலிபேடை அடைவார். மோடி பிற்பகல் 3:00 மணி முதல் 4:15 மணி வரை பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். அதன் பிறகு, அவர் மாலை 5:00 மணிக்குள் சென்னை விமான நிலையம் திரும்பி, சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுவார்.
பிரதமர் வருகையை ஒட்டி செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜனவரி 21 முதல் 23 வரை மூன்று நாட்களுக்கு மாவட்டத்தில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மீனம்பாக்கம் மற்றும் கிண்டி பகுதிகள் ‘சிவப்பு மண்டலமாக’ அறிவிக்கப்பட்டு, ஹீலியம் பலூன்கள் உட்பட அனைத்து ஆளில்லா பறக்கும் சாதனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது! மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன்.
ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.” என்று குறிப்பிட்டுள்ளார்..



