தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிகரிக்கும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் காரணமாக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது அதிகரித்துள்ளது. அமேசான், கூகுள் போன்ற டெக் நிறுவனங்கள் தொடர்ச்சியாக பணி நீக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பணி நீக்கத்திற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு ஊழியர்களை எச்சரித்துள்ளார்.
அவர் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள குறிப்பில், ”ஜனவரி 10 முதல் பல்வேறு துறைகளில் 1,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. இந்த ஆண்டு பெரிய இலக்குகளை அடைய முக்கியமான விஷயங்களில் முதலீடு செய்ய இருப்பதால், மேலும் பணி நீக்கங்கள் நிகழக்கூடும். இந்த பணி நீக்கங்கள் கடந்த ஆண்டு செய்யப்பட்ட 12,000 பணிநீக்கத்தைப் போல விரிவாக இருக்காது. அனைத்து டீம்களிலும் இந்த பணி நீக்கங்கள் நடைபெறாவிட்டாலும், ஊழியர்கள் தங்களது சக ஊழியர்கள் மற்றும் அணிகள் மாற்றங்களைச் சந்திப்பதைப் பார்ப்பது கடினமாக இருக்கும்.
எங்களுக்கு லட்சிய இலக்குகள் உள்ளன. இந்த ஆண்டு எங்கள் பெரிய முன்னுரிமைகளில் முதலீடு செய்வோம். முதலீட்டுக்கான திறனை உருவாக்க நிறுவனம் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், எந்தெந்த டீம்கள், எவ்வளவு ஊழியர்கள் நீக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடப்படவில்லை. இது கூகுள் ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மற்றொரு அமேசான் நிறுவனம் ஜனவரி 18 அன்று 2022இல் தொடங்கப்பட்ட `பை வித் ப்ரைம்’ (Buy with Prime) யூனிட் பிரிவிலிருந்து 5 சதவிகித ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் சரியான எண்ணிக்கையை நிறுவனம் வெளியிடவில்லை. கிடைக்கப்பட்ட தகவலின்படி, பை வித் ப்ரைம் பிரிவில் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.